Home / eBooks / Thaayar Sannathi
Thaayar Sannathi eBook Online

Thaayar Sannathi (தாயார் சன்னதி)

About Thaayar Sannathi :

சிறுவயதில் வருடத்துக்கொருமுறை வரும் பொங்கல் வாழ்த்துக்காகக் காத்திருப்போம். வாழ்த்து அட்டையில் நம் பெயர் போட்டு வருகிற பொங்கல் வாழ்த்து அட்டைகள் தந்த சந்தோஷத்தை இப்போது நினைத்தாலும் உணர முடிகிறது. பின் ஓரளவு வயது வந்த பிறகு நம் பெயர் தாங்கி வந்த கடிதங்கள் கூட சிறு வயதில் பொங்கல் வாழ்த்து தந்த உற்சாகத்தைக் கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். விதவிதமான கலர் ஸ்கெட்ச் பேனாக்களால் ஓட்டப்பிடாரம் இளசை அருணா அவர்களின் அழகான கையெழுத்துடன் என் தகப்பனாருக்கு வருகிற கடிதங்களை தபால்காரர் வந்து கொடுக்கவும், அதை ஆசை ஆசையாக வாங்கிப் பார்த்த சிறுவயது நினைவுகளை இன்றைய தலைமுறையினரிடம் பகிர்ந்தால் அவர்களால் அதை ரசிக்கவோ, வியக்கவோ இயலாது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனந்த விகடன், குமுதம் கல்கண்டு(அப்போதெல்லாம் இரண்டையும் சேர்த்துதான் சொல்வார்கள். வாங்குவார்கள்), கல்கி, இதயம் பேசுகிறது, சாவி, குங்குமம், முத்தாரம், பேசும் படம், பொம்மை போன்ற பெரியவர்களுக்கான வார, மாத பத்திரிக்கைகளுக்கிடையே சிறுவர்களுக்கான முத்து காமிக்ஸ் ஒளிந்திருக்கும். எப்போதும் சொப்பனத்தில் வருகிற ‘இரும்புக்கை மாயாவி, உற்ற தோழனாக மனதில் பதிந்த ‘சுட்டிக்குரங்கு’ கபீஷ், நினைத்தாலே அச்சம் கொள்ள வைக்கிற வேட்டைக்காரன் மாத்தையன், பெரியவனானதும் இவரைப் போல்தான் ஆக வேண்டும் என்று மனதுக்குள் சூளுரைக்க வைத்த ‘மந்திரவாதி’ மாண்ட்ரேக், அவருடனேயே வரும் பலசாலி ‘லொதார்’, வியக்க வைத்த ‘ரிப் கெர்பி’, அவரது உதவியாளர் டெஸ்மாண்ட் என பல கதாபாத்திரங்கள் ‘முத்து காமிக்ஸ்’ புத்தகங்களிலிருந்து வெளியே வருவார்கள்.

தொலைக்காட்சி இல்லாத அந்தக் காலத்தில் இவர்களை புத்தகங்களில் மட்டுமே பார்த்து உறவாட முடிந்தது. இன்றைக்கு எல்லாவற்றையும், எல்லோரையும் தொலைக்காட்சியில், இணையதளங்களில் பார்க்க முடிகிறது. முன்பு சொன்ன பத்திரிக்கை பட்டியலில் எஞ்சி நிற்பவை சொற்பம்தான். இணையத்தில் படிப்பவர்கள் பெருகி விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் இணையத்தில் ‘மட்டுமே’ படிப்பவர்கள் பெருகி விட்டார்கள். ஒரே வீட்டில் வசிப்பவர்கள் கூட பிறந்தநாள் வாழ்த்துகளை ‘ஃபேஸ்புக்’ மூலமாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அதன் சுவாரஸ்யமும், புதுமையும் அவர்களுக்குப் (அவர்களைப்) பிடித்திருக்கிறது. இணைய இதழ்கள் போக அச்சில் வருகிற செய்தித்தாள்களும், பத்திரிக்கைகளும் கூட இப்போது இணையத்துக்குள் உலவத் துவங்கிவிட்டன.

எனது புத்தகங்களும் இணையத்தில் கிடைப்பதற்கு ‘புஸ்தகா’ நிறுவனத்தினர் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். ஏற்கனவே எனது ‘உபசாரம்’ புத்தகத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிற ‘புஸ்தகா’ நிறுவனம், இப்போது எனது முதல் புத்தகமான ‘தாயார் சன்னதி’யை இணையத்தில் வெளியிடுகிறார்கள். ‘வார்த்தை’ சிற்றிதழிலும், பின் ‘ஆனந்த விகடன்’ இதழிலும் தொடர்ந்து தொடர் எழுதியவன், நான். இவற்றுக்கிடையே நான் அதிகமாக எழுதியது, ‘சொல்வனம்’ மின்னிதழில்தான். ஆக, இணையத்தில் எழுதிய முன் அனுபவம் எனக்குள்ளது. ஆனால் இணையத்தில் வெளியாகும் என் புத்தகத்துக்கு நான் முன்னுரை எழுதுவது எனக்கே புதிய அனுபவம். ‘தாயார் சன்னதி’ புத்தகத்துக்கான வாசகர் கடிதங்களை இன்றைக்கும் நான் பெற்று வருகிறேன். கடிதங்கள் என்றால் கலர் ஸ்கெட்ச் பேனாக்களால் எழுதப்பட்ட அஞ்சலட்டைகளோ, நீல நிற இன்லேண்ட் லெட்டரோ அல்ல. மின்னஞ்சல்கள்.

காலமாற்றத்தை ஏற்றுக் கொண்டு இணையத்தில் ‘தாயார் சன்னதி’யை வெளியிட சம்மதித்தேன். இதை வெளியிடுகிற ‘புஸ்தகா’ நிறுவனத்தின் ராஜேஷ் தேவதாஸுக்கும், ‘தாயார் சன்னதி’ புத்தகத்தை முதன் முதலில் அச்சில் வெளியிட்ட ‘சொல்வனம்’ பதிப்பகத்துக்கும் இந்த நேரத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுகா
ஜூன் 25 2020
சென்னை - 93

About Suka :

சுகா பிறந்தது திருநெல்வேலியில். மனைவி, மகனுடன் வசிப்பது சென்னையில். எழுத்தாளர். நல்ல விமர்சகர். பாலுமகேந்திராவின் மாணவர். திரைப்பட இயக்குநர். தூங்காவனம் திரைப்படத்தின் வசனகர்த்தா. பாபநாசம் திரைப்படத்தில் இவர் பெரும்பங்கு ஆற்றியுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books