வாழ்க்கையில் நமக்கு நேரடியாகக் கிடைக்கும் அனுபவங்கள், ஒரு பார்வையாளராக மற்றவர்கள் வாழ்க்கையில் நாம் காண்பவை, இதைத்தவிர நாம் படித்து, கேட்டுத் தெரிந்து கொள்ளும் விஷயங்களே ஒரு சிறுகதைக்கு வித்தாக அமைகிறது. அந்த வகையில் இந்தத் தொகுப்பில் அமைந்துள்ள சிறுகதைகளை இன்னொரு முறை சேர்ந்தாற் போல படித்துப் பார்க்கும் போது என் மனதை பாதித்த விஷயங்கள் சரியாக பதிவு செய்யப்பட்ட நிறைவு ஏற்படுகிறது. இந்த தொகுப்பிற்கு அழகுற அணிந்துரை கொடுத்த ‘கலைமகள்' ஆசிரியர் திரு. கீழாம்பூர் அவர்களுக்கும் மிகச் சிறப்பான முறையில் பதிப்பித்திருக்கும் பதிப்பாளருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- அன்புடன்,
ரேவதி பாலு.
சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகியுள்ளன. இவருடைய நாடகங்கள் சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்சியில் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளன. சென்னை வானொலியில் ஐந்து வருடங்கள் தொடர்ந்து 'நகர்வலம்' நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.
பரிசுகள்:
1) இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான மாதப் பரிசினை, இரு முறை வென்றிருக்கிறார்.
2) ஆனந்தவிகடன் வாரப் பத்திரிகையின் வைரவிழாப் போட்டியில் இவருடைய நகைச்சுவை ஓரங்க நாடகம் முதல் பரிசு வென்றிருக்கிறது.
3) கலைமகள் சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு.
4) கலைமகள் 'குறுநாவல்' போட்டியில் இரண்டாவது பரிசு.
5) 'இலக்கிய பீடம்' மாத இதழ் வருடந்தோறும் நடத்தும் சிறுகதைப் போட்டியில் மூன்று முறை ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
6) மங்கையர் மலர் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
7) நெய்வேலி புத்தக கண்காட்சியில் 2016ஆம் வருடத்திற்கான சிறந்த எழுத்தாளர் பரிசு கிடைத்துள்ளது.