அமெரிக்கா போகாமலேயே, வாஷிங்டன் நகரைப் பார்க்காமலேயே, வாஷிங்டனில் திருமணம் எழுதினேன். ஆனால் தெப்போ -76-ஐ அப்படி எழுதவில்லை. ஜப்பான் நாட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்த பிறகே எழுதியுள்ளேன். தேர் விடப்பட்ட கின்ஸா வீதிகள், தெப்பம் விடப்பட்ட ஹகோனே ஏரி, இம்பீரியல் பாலெஸ், கியோட்டோ, ஒஸாகா, நாரா ஆகிய எல்லா இடங்களும் எனக்கு நன்கு தெரியும். போதாக் குறைக்கு இந்த இடங்களைப் பற்றிய பல புத்தகங்களையும் வரைபடங்களையும் கரைத்துக் குடித்து விட்டேன்.
சென்னை நகரில் எனக்குப் பல இடங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஜப்பானில், அதுவும் டோக்கியோவில் உள்ள சந்து பொந்துகளெல்லாம் எனக்குத் தெரியும்.
தேர் விடுவது அத்தனை சுலபமல்ல. அதற்கு அனுபவமும் ஆற்றலும் வசதியும் இருக்க வேண்டும். அதற்குத் தகுதியானவர் யார் என்று யோசித்து, திருவாரூர் வி.எஸ்.டி. அவர்களைத் தேர்ந்தெடுத்து முக்கியப் பொறுப்புக்களை அவரிடம் ஒப்படைத்தேன். அவரும் மனப்பூர்வமாக அதற்கு ஒப்புக் கொண்டார். தெப்போ திருவிழாவைச் சிறப்பாக நடத்திக் கொடுத்ததோடு இந்தப் புத்தகத்திற்கு அருமையான முகவுரை ஒன்றும் எழுதித் தந்துள்ளார். அவருக்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடக்க விழாவுக்குக் கலைஞர் அவர்களை அழைத்துச் சென்றேன். மிகச் சிறப்பதானதொரு சொற்பொழிவு நிகழ்த்தி, இந்த நகைச்சுவை நவீனத்துக்கேற்ற வகையில் நகைச்சுவையான முறையில் பேசி விழாவைத் தொடங்கி வைத்தார். வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான அம்மாஞ்சி, சாம்பசிவ சாஸ்திரி, கோபால் ராவ், பஞ்சு இவர்கள் நால்வருடன், புதிய காரெக்டராக ஜப்பான் சாஸ்திரியையும் உருவாக்கினேன்.
இவர்களுடைய நகைச்சுவை உரையாடல்கள் தேரோட்டத்தின் சிரமம் தெரியாமல் பார்த்துக் கொண்டன.
- சாவி
'சாவி' சிரிக்கத் தெரியாதவனையும் தனது எதார்த்தமான எழுத்துக்களால் சிரிக்க வைக்கக் கூடியவர். ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தும் கூட அதிகம் பெருமை பாராட்டவர். தனது முத்தான எழுத்துக்களால் வாசகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவரது கதைகள் அனைத்தும், மக்களை கவரும் படியாக அமைந்து உள்ளதால் தான் எக்காலத்திலும் மக்களால் விரும்பப் படுகிறது.
Rent Now