Padman
காதல், வீரம், ஞானம் ஆகிய மூன்றுக்கும் அதிபதியாகப் போற்றப்படும் இறைவன் முருகப் பெருமான். காதல் அதாவது இச்சா சக்திக்கு வள்ளி, வீரம் அதாவது கிரியா சக்திக்கு தேவசேனா ஆகியோர் சமேதனாய் ஞான சக்தியாக திருமுருகன் வீற்றிருக்கிறான்.
முருகன் ஒரு வித்தியாசமான கடவுள். அவன், ஒரு கலவை. பெயரே ஸ்கந்தன் அல்லவா? ஸ்கந்தம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு ஒன்றான கலவை, இணைப்பு என்று அர்த்தம் உள்ளது. அவன் ஒரு சுயம்பு.
மலைக் குகைகளிலும் மனக் குகைகளிலும் வாழும் குகப் பெருமானான முருகனை முழுமையாக உணர்ந்து உரைக்க யாராலும் இயலாது. இருப்பினும், பரந்து விரிந்துபட்ட முருக வழிபாட்டை அவனருளால் என்னால் இயன்ற அளவுக்கு இந்நூலில் எடுத்துரைக்க முயன்றுள்ளேன்.
பத்மன் என்ற பெயரில் பல ஆண்டுகளாக கதை, கவிதை, கட்டுரைகளை எழுதிவரும் நா. அனந்த பத்மநாபன், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத் துறையில் 30 ஆண்டுக்கால அனுபவம் வாய்ந்தவர். தினமணி நாளிதழ், சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி, வின் டிவி உள்ளிட்ட ஊடகங்களின் செய்திப் பிரிவில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
கடந்த 2005-இல், இதழியல் குறித்து இவர் எழுதிய மூன்றாவது கண் என்ற நூல், சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருதை வென்றது.
திக்கெட்டும் திருமுருகன், ஆண்டவன் மறுப்பும் ஆன்மீகமே, தத்துவ தரிசனம், முடியாத முடிவு (கவிதைத் தொகுப்பு), கருணைக்கு மறுபெயர் கசாப் (கட்டுரைத் தொகுப்பு), யாரும் சொல்லாத கதைகள் (சிறுவர் கதைகள்), சிவகளிப் பேரலை (சிவானந்த லஹரியின் தமிழ் மொழிபெயர்ப்பு), தென்முகக் கடவுள் துதி (தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்), ஆறுமுக அரவம் (சுப்ரமண்ய புஜங்கம்), அறுபடை அந்தாதி, பொருள் தரும் குறள் உள்ளிட்ட நூல்களைப் படைத்துள்ளார்.
சுதந்திரப் போராட்டத் தலைவர் வீர சாவர்க்கரின் “Six Epochs of Indian History” நூலை, “பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள்” (விஜயபாரதம் பிரசுரம் வெளியீடு) என்ற தலைப்பில் அண்மையில் மொழிபெயர்த்துள்ளார்.
கவிஞர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர். வணிகம் வசப்படும், செல்வம் வசமாகும் உள்ளிட்ட நேரலை முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் நெறியாளர்.அன்பு பாலம் அமைப்பிடமிருந்து பன்முக ஊடகவியலாளர் விருது (2009), புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் இதழியல் சுடர் விருது (2015), விஸ்வ சம்வாத் கேந்திரா அமைப்பிடமிருந்து சிறந்த பத்திரிகையாளருக்கான நாரதர் விருது (2017), சிவநேயப் பேரவையின் தமிழறிவன் மாமணி விருது (2017) உள்ளிட்ட விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.