திருவள்ளுவர் சொற்படி, காதல்-நோய்க்குக் காரணமாகவும், அதே சமயம் மருந்தாகவும் காதலி அமைவது போல, நகைச்சுவை உணர்வுக்கு பி.ஜி. வுட்ஹஷசம், தேவனும் எனக்கு அமைந்து, இன்றும் அமைந்தபடி!
டிராம் ஓடிக் கொண்டிருந்த நாட்களில் சென்னை ஹிக்கின்பாதம்சில் வாங்கிய முதல் வுட்ஹவுஸ் புத்தகத்திலிருந்து கோபுலுவின் உயிரோவியங்கள் அலங்கரிக்க வந்த தேவனின் படைப்புகள் வரை எல்லாமே, வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளால் ஸ்தம்பித்துப் போக முயன்ற உணர்வுகளை, மயிலிறகு போல் வருடி, புத்துணர்ச்சி ஊட்டி, இதயத்தையே 'கிஜூ கிஜூ' செய்து பார்வைகளில் கோணங்களை மாற்றியுள்ளன. இன்றும் மாற்றி வருகின்றன.
"என்னிடம் மாத்திரம் நகைச்சுவை உணர்வு இல்லாமல் இருந்திருந்தால், நான் எப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பேன்" என்றார் மகாத்மா காந்தி.
நகைச்சுவை என்பது ஒரு மனிதன் அணிய வேண்டிய நளினமான உடை அல்ல. கர்ணனைப் போல் பிறவியிலிருந்தே பூண வேண்டிய கவசம் அந்தக் கவசத்தை சோதனைக் காலத்தில் தானம் செய்து விட்டால்...?
"நகைச் சுவையாக எழுதுவது ஒரு சீரியசான வேலை, என்று சொல்லிவிட்டு, நகைச்சுவை எழுத்தாளர்கள் சுலபமாகத் தப்பித்துக் கொண்டு விடுகின்றனர்” என்று சீரியசாக எழுதுபவர்கள் நகைச்சுவையாகச் சொன்னாலும், நகைச்சுவைப் படைப்புகள் பத்திரிகைகளில் சந்திக்கும் சோகமான முடிவு சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.”
'சிரிப்பே சிறந்த மருந்து' என்று சொல்லப்படுவதால்தான் பத்திரிகைகளில் மருந்தளவில் நகைச்சுவைப் படைப்புகள் இடம் பெறுகின்றனவோ என்னவோ? மேற்கூறியவை, நகைச்சுவை எழுத்தாளர்களின் மனதில் அவ்வப்போது தோன்றக் கூடிய எண்ணங்கள் என்றாலும், தொடர்ந்து அவர்கள் வெற்றி பெறுவது, சிலந்தியைப் பார்த்து மனம் தளராது முயன்ற ப்ரூஸ் அரசனை முன் உதாரணமாகக் கொள்வதால்தான்!
முயற்சி திருவினையாகி மலர்ந்து உதிரிப்பூக்களை மாலையாகக் கட்டி மகிழ வேண்டும் என்று கண்ட கனவு நினைவானது மகிழ்ச்சி அளிக்கிறது. 'சிரி’ப்பூக்களின் மணம் வாசகர்களின் மனம் நிறைய வைக்கும் என்ற நம்பிக்கையுடன்.
- ஜே.எஸ். ராகவன்
1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியா வின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதிவரும் இவரது வயது 78.
வட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார்.
தொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர் வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்..
Laughing Tablets என்கிற ஆங்கிலத் தொகுப்பு, சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய இந்த சிவசாமியின் சபதம் முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 28.
தேவன் அறக்கட்டளை விருதுபெற்ற இவருக்குப் பிடித்த சவால் வாசகம்: 'அறிவில் சிறந்தவர்களைச் சிரிக்கவைப்பது கடினம்!'
Rent Now