சாய்ரேணு
தமிழ்பிறந்த பொதிகையின் மடியில் தவழும் தென்காசி இவர் ஊர். இவர் குடும்பமோ தமிழும் வடமொழியும் இருகண்களாய், ஆன்மீகமே உயிராய்க் கொண்டது. இளைய வயதிலேயே தமிழில் ஈடுபாடு வந்தது. மாதவன் கருணையால் மன்னுபுகழ் மஹாபாரதம் ஏழுவயதிலிருந்து தோன்றாத் துணையானது. கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறார். அவை பல பத்திரிகைகளில் வந்துள்ளன.
பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், ஆன்மீகத் துறையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை குங்குமம் ஆன்மீகம், அம்மன் தரிசனம் போன்ற ஆன்மீகப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டுள்ளன. உபநிடதம், புராணம், இதிகாசங்கள், திருமுறை, திவ்வியப் பிரபந்தம், திருத்தலப் பயணங்கள் இவற்றில் ஆர்வம் அதிகம்.
க்ரைம் நாவல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். இவரின் ஆதரிச எழுத்தாளர்கள் – திரு ரா கணபதி, திரு கல்கி, திரு ராஜேஷ்குமார். ஹாரி பாட்டரின் ரசிகையான இவர் குழந்தைகளுக்கான மாயாஜாலக் கதைகளும் எழுதுகிறார். எந்தத் துறையில் எழுதினாலும் தர்மம், இறைநம்பிக்கை ஆகிய இரண்டும் குறையாது இருக்கவேண்டும் என்பது இவர் கொள்கை.
தற்போது தன் தாய், கணவர், மகளுடன் திருநெல்வேலியில் வசிக்கிறார்.
Rent Now