பொதுவாக வாழ்க்கை என்பது என்ன என்று பார்த்தால் பொருளாதாரச் சிக்கல்களைவிட இப்படிப்பட்ட மனித நேயத்திலும், தோழமையான உறவு முறைகளிலும், அன்பைச் செலுத்திப் பெற்றுக் கொள் வதிலும் ஏற்படுகிற சிக்கலே அதிகமிருக்கின்றன. இப்படிப்பட்ட உள் மனப் போராட்டங்கள் இல்லாது போனால், தான்- தனது என்று உலகத்தின் வட்டம் குறுகாமல் இருந்திருக்குமானால் பகிருதல் என்பது சுலபமாகிப் போயிருக்கும். பகிருதல் ஏற்பட்டிருந்தால் பொருளாதாரச் சிக்கல்கள் மிகச் சுலபமாகத் தீர்ந்து போயிருக்கும்.
அவ்வாறில்லாமல் அன்பு செலுத்துவதில், தோழமையில், மனித நேயத்தில், உறவுமுறைகளில் ஏற்படுகிற முறிவுகளே வாழ்க்கையில் சிக்கல்களையும், சங்கடங்களையும் உண்டாக்குகின்றன. அச்சிக்கல்களையும், முடிச்சுக்களையும், மற்ற மனங்களை ரணமாக்காமல், கஷ்டப்படுத்தாமல் மென்மையாய், நிதானமாய், இதமாய் அவிழ்க்க வைக்க முடியுமா என்று பார்க்கிறேன். வாழ்க்கை வாழ்வதற்குத்தான். வருத்திக் கொள்வதற்கல்ல, மற்றவர்களை வருத்தப் படுத்துவதற்கும் அல்ல என்று நான் புரிந்து கொண்டதை மற்றவர்களுக்குப் புரியவைக்க முயலுகிறேன்.
இதையேதான் இந்தத் 'தொடுவான மனிதர்'களிலும் தொட்டிருக்கிறேன். இதில் வருகிற ராதிகா, ராம்குமார், கார்த்திக், முக்கியமாய் அந்தப் பாட்டி.... யதார்த்தமான அவரின் முற்போக்குச் சிந்தனை, விவேகமான வழியினைத் தேடித்தருகிற பேச்சு.... அவர்கள் யாரும் கற்பனைக் கதாபாத்திரங்கள் அல்ல. கதைக்காக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. சில நிஜங்கள் சிறிது கற்பனை சேர்க்கப்பட்டு நகாசு வேலையுடன் இங்கே "தொடுவான மனிதர்களாகப் பரிணமிக்கின்றனர்.
இந்துமதி என்ற பெயரில் எழுதும் இவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சொந்தக்காரர். கிட்டத்தட்ட நூறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன.மூன்று சிறுகதைத் தொகுதிகள்.இவரது தரையில் இறங்கும் விமானங்கள்,சக்தி,நாவல்கள் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும்,கங்கா யமுனா சரஸ்வதி சன்,ராஜ் டிவி களிலும், நீ நான் அவள் விஜய் டிவியிலும் தொடர்களாக ஒளிபரப்பப் பட்டன.இவர் திரைப்படத் துரையிலும் கால் பதித்துள்ளார்.அஸ்வினி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார். திரைப்படத் தணிக்கைக்குழு அங்கத்தினராகவும் இருந்துள்ளார்.தி
இவரது தரையில் இறங்கும் விமானங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் துணைப்பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. குருத்து, தண்டனை போன்ற சிறுகதைகளும் துணைப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவைகளே! மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
Rent Now