எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் அழைப்பின் மேல் விருந்துக்குப் போயிருந்த சமயம். சாப்பாடு முடிந்து பேசிக் கொண்டிருந்தபோது அந்த நண்பர் தம்பதிகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அந்த அறிமுகத்தில் ஒரு புதுமை இருந்தது. எளிதில் விவரிக்க இயலாத எத்தனையோ உணர்ச்சிகள் அந்தப் பெண்ணின் முகபாவத்தில் நிழலாடுவதை என்னால் காண முடிந்தது. அந்தத் தம்பதிகளின் வாழ்க்கையில் அந்தத் திருமணம் ஒரு சாதனை என்றே எனக்குத் தோன்றியது. நண்பரை விசாரித்தேன்.
அவள் சிறு பெண்ணாக இருந்தபோதே கணவனை இழந்தவள். அதுமட்டுமல்ல; அவளை இப்போது மணந்து கொண்டிருப்பவர் அவள் கணவனின் நண்பர். அவருடைய இறுதி வேண்டுகோளின் படிதான் அவளுடைய வாழ்க்கையில் இந்த மறுமலர்ச்சி தோன்றியது. இதை அறிந்தபோது, அந்த மூன்று உள்ளங்களிலும் ஒவ்வொரு விதத்தில் போற்றத்தக்க, உணர்ந்து பச்சாத்தாபப்படுவதற்குரிய, உணர்ச்சிக் கோணங்கள் எனக்குப் புலனாயின. எப்போதும் ஒரு வாழ்க்கையை வளப்படுத்த வேண்டும். அதற்குப்பண்பட்ட உள்ளங்கள் தேவை. ஒருவரை மற்றவர் உணர்ந்து, உடன் அநுபவித்து, புரிந்து, விட்டுக்கொடுத்து, அனுசரித்துப் போகவேண்டிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ! அப்போது அவர்களிடையே தோன்றும் மன நெகிழ்ச்சிக்கு அளவு கோல் இல்லை. அன்பின் ஆழத்தில் மறைவாய் மின்னி ஒளிர்வதே அதன் சிறப்பு.
இங்கே மூன்று உள்ளங்கள் ஒரு வாழ்க்கையை வளப்படுத்தியதைக் கண்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அதற்குரிய பாத்திரமாகக் கலந்து கொணடிருந்தார்கள். அந்தப் பெண்ணின் உலகம் தெரியாத பிராயம், கணவனின் இளமைத் துடிப்பு, திருமணம் பயனின்றி முடிந்தபோது விளைந்த தவிப்பு, அதை வீணாக்காமல் மீட்க இரு நண்பர்களிடையே இருந்த துணிவு, ஒவ்வொன்றும் கண்ணாடியில் விழுந்த ஒளிக் கதிர்களாக என்னுள் வண்ண அலைகளை விசிறின. என் எண்ணங்களுக்கு எழுத்தில் ஓர் உருவம் காண முயன்றேன்.
அந்த வித்தின் மலர்ச்செடிதான், 'துடிப்பின் எல்லை'
லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.
படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.
Rent Now