Home / eBooks / Thulli Thiriyum Ninaivalaigal - Part 2
Thulli Thiriyum Ninaivalaigal - Part 2 eBook Online

Thulli Thiriyum Ninaivalaigal - Part 2 (துள்ளித் திரியும் நினைவலைகள் - பாகம் - 2)

About Thulli Thiriyum Ninaivalaigal - Part 2 :

குழந்தை மனது பிரபஞ்சத்தையே நேசிக்கச் செய்யும் வல்லமை கொண்டது. அதன் விசாலம் எல்லையற்றது. எல்லாத் திசைகளிலும் வியாபித்திருப்பது. அணிச்ச மலரையும்விட மென்மையானது. அதனைக் காப்பாற்றுவதும், உணர்வில் தக்கவைத்துக் கொள்வதுமே ஒவ்வொரு உயிரின் உன்னதத்தை உயிர்ப்போடு இயங்கச் செய்வதற்கான எளிய சூத்திரம். எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் மால்குடி தினங்கள் , மக்சீம் கார்கியின் எனது குழந்தைப் பருவம் போல தமிழில் ஒரு யதார்த்த தளத்தில் இயங்கக் கூடிய குழந்தை இலக்கியமாய் அதே நேரம் யாரும் படிக்க முடிகிற எளிய பதிவாய் ஆக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் பிரதிபலிப்பே இந்தக் கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கிற கடிதங்கள்.

இதில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு அனுபவம் மற்றும் அதன் கிளை அனுபவங்கள். அப்படி இதில் எத்தனை எத்தனையோ அனுபவங்கள். அந்த அனுபவங்கள் எழுத்துக்களைக் கடந்து செல்கையில் வளர்ந்தவர்களின் குழந்தைப் பருவத்தைக் கிள்ளிவிட்டு, அவர்களுக்குள் காலம் ஜெயித்து மாறா சாசுவதத்துடன் மாற்றமற்று அப்படியப்படியே ஒளிந்திருக்கும் குழந்தைப் பருவத்திற்குள் ஆட்காட்டி விரல் பிடித்து அழைத்துச் செல்லும்.

இதில் குழந்தைப் பருவத்து அனுபவங்களும், குழந்தை மனதோடான அனுபவங்களுமாய் நிறைந்திருக்கும். குழந்தைகள், டீன்ஏஜ் பருவத்தினர் என்றழைக்கப்படும் இளந்தளிர்த் தலைமுறைகள் மற்றும் குழந்தை மனது மாறாதிருப்பவர்கள் அனைவருக்குமான பதிவுகளாய் இதன் வீச்சு படிப்பவர் நினைவுகளில் தடம் பதிக்கும். இதன் வழித் தடங்களில் உங்களின் அனுபவங்களோடு ஒத்திருக்கிற சம்பவங்கள் தட்டுப்பட்டுக் கொண்டேயிருக்கும். அதன் தொடர்ச்சியாய் உங்களின் மனதில் எஞ்சிய பிரத்யேக குழந்தை உலகத்தின் அனுபவங்களின் நீட்சியாய், ஞாபகத்தில் கொண்டு வந்து, வார்த்தைகள் கடந்த இனம்புரியாத குதூகலத்திற்குள் மனதின் கைபிடித்து அழைத்துச் செல்லும்.

அதனால் அந்த அனுபவப் பகிர்வினை அவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. அனுபவங்களாகவோ, கதை வடிவங்களாகவோ சொல்லப்படுகிற எண்ணங்கள் அவர்களை லெகுவில் சென்றடைகின்றன. அவர்கள் அதனைத் தங்களின் தேவைக்கேற்பப் புதுப்பித்துக் கொள்ளவும் அதில் இடம் இருக்கிறபடியால் அந்த உத்தி அவர்களுக்கு ஏற்புடையதாகிறது. பெற்றோர்கள் அன்பாகி, அன்புடன் தயாரித்துத் தருகிற எளிய உணவுகூட அவர்கள் உடம்பிற்கு மிகவும் உகந்ததாக மாறிப் போகிறது. வெறுப்போடோ, சலிப்போடோ தயாரித்துத் தருகிற ஊட்டமான உணவுகூட அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாததாகி விடுகிறது என்கிறது அறிவியல். எதையும் பரந்த, பேதமற்ற அன்பிதத்துடன் செய்தால் குழந்தை உள்ளங்கள் அந்த இதத்தில் கதகதப்பு கொள்ளும்.

இன்றைய அதி வேகமான நகரச் சூழ்நிலையில் ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒரே நேரத்தில் இருப்பதென்பது அரிது. அப்படியே இருந்தாலும் தொலைக்காட்சி அவர்கள் நேரத்தை பிடுங்கிக் கொள்ளாமல் இருக்கிறதென்பது அரிதிலும் அரிது. அப்பிடியே ஒன்றாயிருந்து தொலைக்காட்சியும் குறுக்கிடாமல் இருக்கிற நேரத்திலும் மனசு விட்டுப் பேசிக்கொள்வதென்பது அரிதிலும் அரிதரிது.

ஒரு வகையில் இது என்னுடைய சுருக்கி எழுதப்பட்ட சுயசரிதத்தின் முதல் பாகம் என்று கூட சொல்ல முடிகிற அளவிற்கு இந்த கட்டுரைத் தொகுப்பு கல் எறி வட்டங்களாய் விரிந்திருக்கிறது. அது என்னையும் மீறித் தன்னிச்சையாய் வழுக்கிக் கொண்டு வந்து உடன் சேர்ந்து கொண்டவை. எழுத எழுத உள்ளிருந்து தோண்டி எடுக்க வேண்டிய நினைவுகளின் புதையல் கூடிக்கொண்டே போவது ஒரு அதிசயம்.

விடலைப் பருவம் என்கிற துளிர் இளம்பருவத்திலிருக்கும் இளைய மகன் வருணிடம் பொது அறிவு மற்றும் பரஸ்பர அனுபவப் பகிர்தலின் மூலம் புரிதலை மேம்படுத்திக் கொள்வதற்காக ஒரு திட்டத்தைப் புகுத்தினேன். கணினியில் எது வேண்டுமானாலும் பிடித்ததை எழுதுவேன். அதில் பல சின்னச் சின்ன கேள்விகள், தகவல்கள், எண்ணங்கள், கருத்துக்கள், ஆலோசனைகள், வேண்டுகோள்கள், அபிப்பிராயங்கள், நடந்தவை, பிடித்தவை, உணர்ந்தவை என்று பல விசயங்கள் இருக்கும்.

அதற்கு இன்னொரு நாள் அதை வாசிக்கிற வேளையில் அவன் பதிலளிப்பதோடு, அவனுக்குத் தோன்றியவைகள் எது வேண்டுமானாலும் அதில் எழுதலாம். அவைகள் பதில்களாகவோ, வேறு கோணத்திலான கேள்விகளாகவோ விரியும். இப்படி நீட்டித்த விசயத்தின் நீட்சியாகவே இந்தப் பதிவுளைக் கொண்டுவர எண்ணம் துணிந்தது. இதை ஒரு முறையாக வைத்துப் பாலியல் கல்வி குறித்த சிந்தனை உட்பட இந்தத் தொடரைப் பல கோணங்களில் நீட்டலாம் என செயல்படத் தொடங்கினேன். அதற்காக மலரின் பாலியல் வழிமுறை யிலிருந்து துவங்கி மானுடத்தின் உடலியல் மற்றும் பாலியல் கல்வி வரை எளிமையாய், நுண்மையாய் இயல்பாய் உணர்த்த முயன்றிருக்கிறேன்.

நட்புடன், தி. குலசேகர்

About Kulashekar T :

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Rent Now
Write A Review

Same Author Books