K. Jeevabharathy
இருள் விலகும்... பொழுது புலரும்!
‘இறந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும், இனிமேல் பிறப்பவர்களுக்கும் இடையே நிகழும் உடன்படிக்கையே வரலாறு’ என்றார் எட்மண்ட் பர்க்.
நம் கடந்தகால வாழ்க்கையில் அரங்கேறிய நிகழ்வுகள் வருங்காலப் பயணத்தின் திசையைத் தீர்மானிக்கும் வழிகாட்டிகளாக வடிவம் பெறுகின்றன.
ஒரு சமூகம் தன்னுடைய முகத்தைச் சரிபார்த்துக் கொள்வதற்கு அதன் சென்ற காலச் சரித்திரமே நிலைக் கண்ணாடியாய் நிற்கிறது.
என்றோ ஒரு நாள் ஆண்டு, அதன்பின் மாண்டு மண் மூடிப்போன மன்னர்களின் கல்லறைகளைக் காலவரிசைப் படி நமக்குக் காட்டுவதுதான் நாட்டு வரலாறு என்று நாம் பொய்யாகப் புரிந்து வைத்திருப்பதுதான் பெரிய பேதமை.
புதிதாய்ப் பூத்திருப்பதுதான் ‘திருப்பூர் குமரன்’ என்ற இந்த அரிய நூல்.
இன்று எத்தனை பேருக்குச் சுதந்திரப் போரில் கொடி காக்க உயிர் துறந்த குமரனைத் தெரியும்? வாடகை மனிதர்களாய் மேடைகளில் வலம் வரும் எத்தனை பேச்சாளர்களுக்கு நாட்டு விடுதலைக்காக அடிப்பட்டு உடலின் ஒவ்வொரு எலும்பும் முறிபட்டுப் போன சுந்தரத்தின் தியாகம் தெரியும்?
நாளுக்கொரு கட்சியாய் நாடகமாடும் எண்ணற்ற அரசியல் வழிப்போக்கர்களில் எத்தனைபேர் அப்புக் குட்டியை அறிவார்கள்? இன்றைய தலைமுறை சுதந்திரக் காற்றைச் சுகமாய் சுவாசிக்க எண்ணும் உரிமை, எழுதும் உரிமை, ஏசும் உரிமை, பேசும் உரிமை என்று ஆயிரம் உரிமைகளை அணுவளவும் சிரமமின்றி அனுபவிக்க சென்ற தலைமுறை செய்த தியாகங்களை நன்றியோடு நாம் நினைத்து பார்க்க வேண்டாமா?
“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடந்ததும், நூலோர்கள் செக்கடியில் நொந்து தவித்ததும் யாருக்காக?” என்று தேசத்தின் கடந்த கால வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து அவர்களுக்காக இதயம் நெகிழ்ந்து, இருவிழி கசிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டாமா?
நன்றி கொன்றவர்கள் வாழும் நாடு நரகத்தை விட மோசமானது என்ற உண்மையை உணர்த்துவதற்காக ஜீவபாரதியின் எழுத்தில் உயிர்த்தெழுந்ததுதான் ‘திருப்பூர் குமரன்’ நூல்.