Home / eBooks / Uchangalin Yugam
Uchangalin Yugam eBook Online

Uchangalin Yugam (உச்சங்களின் யுகம்)

About Uchangalin Yugam :

வர்க்கச் சுரண்டலையும் ஏற்றத்தாழ்வுகளையும் சாதிய, பாலின ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்து, மானுட சுதந்திரத்தை உறுதிப்படுத்தி, அதை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழிமுறையே சோசலிசம். குடிமை உரிமைகளுக்கு (Civil Rights) சட்டவகைப்பட்ட உத்திரவாதங்கள், முறையாகவும் அரசிடமிருந்து சுதந்திரமாகவும் சுயேச்சையாகவும் சுயாதீனமாகவும் நிலவும் பொதுமக்கள் கருத்து, மூடிய கதவுகளுக்குப் பின்னாலன்றி வெளிப்படையாக நடத்தப்படும் அரசியல், சுதந்திரமான பத்திரிகை உலகம், சமுதாயத்தின் பொது நலன்களைப் பாதிக்காத பல்வேறு கருத்துகளுக்கு இடம் கொடுக்கக்கூடிய அரசியல் கட்டமைப்பு ஆகியனதான் சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள அற்பத்தனமான அல்லது அப்பட்டமான சர்வாதிகாரங்களுக்கு முடிவு கட்டும். திரைமறைவு சூழ்ச்சிகளிலிருந்தும் சொற்ஜாலப் புரட்டுகளிலிருந்தும் பொது மக்களைக் காப்பாற்றும். பொதுவாகச் சொல்லப்போனால் நீதிக்கான தேடலையும் மானுட வாழ்வின் உண்மையான இலக்குகளுக்கும் இலட்சியங்களுக்குமான தேடலையும் அரசியல் செயற்பாட்டின் முதன்மையான குறிக்கோளாக ஆக்க வேண்டும். ஒப்பீட்டு நோக்கில் முன்னைக் காட்டிலும் கூடுதலான பொருளாதார வளர்ச்சியை, பொருட்களின் பகிர்வை சோசலிசம் இல்லாமலேயே சாதிக்க முடியும். தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் இதைச் செய்து காட்டியுள்ளன. ஆனால், மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகளை வெறும் பொருள்களுக்கிடையே உள்ள உறவுகளாக அல்லது அவர்கள் ஒருவரையொருவர் பயன்படுத்திக் கொள்ளும் உறவுகளாக வைத்திருக்கும் நிலையை மாற்றியமைத்து அவற்றை மானுடத் தன்மையாக்குவதே சோசலிசம்.

ஆனால், இத்தகைய சோசலிசத்தை - மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் தரிசனத்தை நடைமுறையில் கைகூடிவரச் செய்வதற்காக லெனின் முதன் முதலில் மேற்கொண்ட முயற்சிக்கு அன்றைய வரலாற்றுச் சூழல் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது.

ஏறத்தாழ 40 ஆண்டுக்காலம் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தோடு ஏதொவொருவகையில் உறவு கொண்டிருந்த எனது புரிதல்களில் வரலாற்று உண்மைகள் ஏற்படுத்திய தாக்கங்களும் மாற்றங்களும் இத்தொகுப்பில் உள்ள சில கட்டுரைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏறத்தாழ 40 ஆண்டுக்காலம் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தோடு ஏதொவொருவகையில் உறவு கொண்டிருந்த எனது புரிதல்களில் வரலாற்று உண்மைகள் ஏற்படுத்திய தாக்கங்களும் மாற்றங்களும் இத்தொகுப்பில் உள்ள சில கட்டுரைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் பல்வேறு சிற்றேடுகளிலும் நாளேடுகளிலும் வெளிவந்தவை. இவற்றை எனது மறுவாசிப்புக்குட்படுத்துகையில் அவற்றிலிருந்த அச்சுப் பிழைகளையும் விவரப் பிழைகளையும் திருத்தியதுடன் சில கட்டுரைகளைச் சற்று சுருக்கவும் வேண்டியிருந்தது. பொதுவுடைமை இயக்கத்தில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் காரணமாக, 'தியனன்மென்’ நிகழ்ச்சி குறித்து நான் 15 ஆண்டுகட்கு முன் எழுதிய கட்டுரையொன்றில் முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகள் சில முற்றிலும் அகவயமான விளக்கங்களைப் பெற்றிருந்தன. சுய விமர்சனத்தோடு அக்கட்டுரையில் பெரிய அளவிற்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட வேறு சில கட்டுரைகளை வெளியிடுவதற்கான வாய்ப்பே கிட்டவில்லை. இத்தொகுப்பின் வழியாகவே அவை முதன்முதலாக அச்சேறுகின்றன.

இருபதாம் நூற்றாண்டுக்கும் இந்த நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளுக்கு உரிய முக்கிய வரலாற்று நிகழ்வுகளின் பதிவுகளே இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள். இருபதாம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான மாபெரும் முயற்சிகள் செய்யப்பட்டன. அம்முயற்சிகள் யாவும் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளன. ஓரளவிற்கு கியூபா மட்டுமே விதிவிலக்காக உள்ளது. உலகமயமாக்கல் என்னும் அரசியல் - பொருளாதார நிகழ்ச்சிப்போக்கு முன் எப்போதும் இருந்திராத அளவில் உலகின் மிகப் பெரும்பான்மையான மக்களை முதலாளியச்சுரண்டலுக்கு உட்படுத்தி வருகிறது. கூடவே ஏகாதிபத்திய சக்திகளின் இராணுவவாதமும் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. மனித குலத்தின் இருப்புக்கே உலை வைக்கப்பட்டு வரும் இந்த நாட்களில் ஏறத்தாழ நூறாண்டுகளுக்குமுன் ரோஸா லுக்ஸம்பர்க் எழுப்பிய - 'சோசலிசமா? காட்டுமிராண்டி நிலையா?’ என்னும் கேள்வி முன் எப்போதையும்விட இன்று மிகவும் பொருத்தப்பாடு கொள்கிறது. இந்த உணர்வோடுதான் இத்தொகுப்பு வெளியிடப்படுகிறது.

ஏறத்தாழ 500 ஆண்டுக்கால முதலாளியத்தின் வரலாற்றோடு ஒப்பிடுகையில் சோசலிச நடைமுறையின் வரலாறு இன்னும் மிக இளமைப் பருவத்திலேயே இருக்கிறது எனலாம். வரலாறு நேர்கோட்டில் செல்வதில்லை. சோசலிசத்தின் வரலாறும் அத்தகையதே. இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் உள்ள அம்சங்களோடு சோசலிசம் முற்றுப் பெறுவதில்லை. மார்க்ஸ் 19ஆம் நூற்றாண்டுப் பாட்டாளிவர்க்கப் புரட்சிகள் குறித்துக் கூறியவை 20, 21ஆம் நூற்றாண்டுகளின் புரட்சிகளுக்கும் பொருந்தும்.

About S. V. Rajadurai :

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும் எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழக அரசியல் ஆகியன பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். இவர் தமிழாக்கம் செய்துள்ள நூல்களில் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ மிகவும் குறிப்பிடத்தக்கது. பெண்ணியச் சிந்தனையாளர் வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர்.

Rent Now
Write A Review

Same Author Books