நிறைய சுவாரஸ்யங்கள் கொண்டது மனித வாழ்க்கை. அபத்தங்களும்கூட அதன் அழகாகத்தான் இருக்கிறது. இன்னமும் நம் ஜீவிதம் நமக்குள், மாற்றங்களும் வித்தியாசங்களும் நிறைந்து ஒரு மெல்லிய நீரோட்டம் போல சலசலத்துக் கொண்டு இருக்கிறது என்பதற்கு சின்னச்சின்ன காரணங்கள் நமக்குள் தேங்கிக் கிடக்கின்றன.
பல்வேறு உணர்ச்சிகளை பயணவெளியில் கடந்து போகிறோம். நாமே நமக்கு மாபெரும் புரியாத புதிர். அந்தப் புதிர் விளங்கிக் கொள்ளப்படும் வரை நமது வாழ்க்கையின் சுவை குறையாமலேயே இருக்கும். ஆசைகளும் அவஸ்தைகளும், இன்னும் இன்னும் இருக்கின்றன. இதுபோலவே நம்முடன் இருக்கிற ஆகச்சிறந்த உணர்ச்சிகளெல்லாம் 'உலகம் இப்படித்தான்' என்கிற இந்த நூலின் வழி பதிவாகியிருக்கின்றன.
'காக்டெயில்' என்ற தலைப்பில் பதிவாகி வந்த இந்தத் தொடர் வாசகர் மத்தியில் அப்போது நல்ல வரவேற்பைப் பெற்றது. இது வெளிவந்த நாட்களிலேயே, பலரும் இந்தத் தொடர் நூலாக வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால், அது இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது.
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் நம்மிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில் இந்த நூல் நீங்கள் பெறுவதற்குரிய விஷயங்களோடு வந்திருக்கிறது. உலகம் என்னதான் மாற்றங்களை அடைந்து கொண்டே இருந்தாலும், மாறாத சில விஷயங்கள் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
நாமும் சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் வாழ்ந்திருக்கக்கூடும் இந்த வாழ்க்கையை. அட... 'இது நம்மளகூட க்ராஸ் பண்ணி போச்சில்ல...' என்று சில இடங்களை வாசிக்கும்போது நிச்சயம் ஒவ்வொருவருக்கும் தோன்றும். அப்படி தோன்றச் செய்வதே இந்த நூலின் முக்கிய அம்சம். அவற்றை நீங்களே காணப்போகிறீர்கள். வேறென்ன சொல்வது...?
புத்தக வடிவில் இதோ ஒரு உலகம்; எழுத்துப் பயணிகளுக்கான உலகம். பயணப்படுங்கள்...
ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.
- கல்கி
'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.
- சுஜாதா
Rent Now