என் தந்தை அப்போது அரசினர் பணியில் இருந்தார். இரண்டாவது உலக யுத்தம் தொடங்காத காலம். பக்கத்துவீட்டில் அழகான வடிவமும், குறுகுறு வென்ற முகக்களையுமாக ஒரு பெண். சிறு குழந்தையான எனக்குங்கூட, அதிகப்படிப்பு இல்லாத, ஆனால் பண்பும் நயமும் நிறைந்த, அந்தப் பெண்ணிடம் ஒரு பிரமை. “கௌரி, கௌரி” என்று அவளோடு விளையாடப் போவேன். என்னோடு அவள் கண்ணாமூச்சி விளையாடு வாள். அவள் தாவாணியை எனக்குப்போட்டு நாடக மாடுவாள். அவள் கதை சொல்லத் தொடங்கினால் எனக்குப் பொழுது போவதே தெரியாது.
அந்த வீட்டுக்கு ஒரு பையன் படிப்புக்காக வந்து சேர்ந்தான். அப்புறம் அவள் என்னோடு பழகுவது குறைந்து விட்டது. அவள் பேச்சில், உடையில், பாவனைகளில் ஏதோ ஒரு வித்தியாசம். அந்தச் சிறுவயதில் எனக்கு விளங்காத ஒரு மாறுதல், இனம் புரியாத ஒரு வேதனையை அவள் விழுங்கிக் கொள்வது போல எனக்குத் தோன்றும். என்னைப் போலவே அந்தப் பையனுக்கும் அந்த உணர்ச்சிக்கோலங்கள் புரிபடவில்லை என்று தான் நினைக்கிறேன். நான் சிறு குழந்தையாக விளையாடினேன். அப்புறம் அவன் சம வயதுக் குழந்தையாக விளையாட வந்து சேர்ந்தான். அப்படித் தான் எனக்குத் தோன்றிற்று.
கௌரி மணமாகிப் போய்விட்டாள். வயதான அவள் அத்தை குடிபெயர்ந்து போய்விட்டாள். அந்தப் பையனும் வேறு எங்கேயோ போய்விட்டான். தந்தைக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஊர் மாறுகிற உத்தியோகம். இருபது ஆண்டுகளின் நினைவோட்டத்தில், கௌரியின் நினைவு, அவ்வப்போது ஏதாவது ஒரு பின்னணியில் கண் விழித்துக் கொண்டே இருக்கும். சமீபத்தில் மதுரையின் மாடவீதிகள் ஒன்றில் தற்செயலாக அந்தப் பையனை, நடுத்தர வயது மனிதராகச் சந்தித்தேன்.
“கௌரி எங்கே இருக்கிறாள் இப்போது?” என்று கேட்டேன். அவருக்கும். கௌரிக்கும் என்ன தொடர்பு? அவளைப்பற்றித் தெரிந்திருக்க என்ன நியாயம்? என் நெஞ்சில் வெளிப்படத் தவித்துக் கொண்டிருந்த ஒரு கேள்வியை எப்படியோ கேட்டுவிட்டேன். அவ்வளவு தான். சட்டென்று அவர் முகம் மாறிப் போயிற்று. “அவள் கணவன் அவளைத் தவிக்கவிட்டுவிட்டுப் பர்மாவுக்குப் போய்விட்டான். அவளை நன்றாக வைத்துக் கொண்டிருக்கக்கூடிய, அவளுடைய குண அழகுகளைத் தெரிந்துகொண்ட யாருக்காவது அவளைக் கலியாணம் செய்து கொடுத்திருக்கலாம். அத்தைப் பாட்டி அவசரப் பட்டு விட்டாள். இப்போது அவள் எங்கே இருக்கிறாளோ?” என்று இழுத்தாற்போலக் கண்டம் கலங்கப் பேசுவதை நிறுத்திக்கொண்டு விட்டார்.
நான் விடை பெற்றுக்கொண்டு வந்து விட்டேன். அவர் முகமும் பேச்சும் நினைவில் எழுப்பிய எதிரொலி அப்புறம் வெகுநேரத்துக்கு அடங்கவே இல்லை. “அவளைத் தெரிந்து கொண்ட யாருக்காவது...” என்று சொல்லி அவர் நிறுத்தியது, தன்னைப் பற்றியே இருக்குமோ? என்றோ நடந்து பூர்த்தியாகாமல் நின்று விட்ட ஒரு மௌன நாடகமா இன்றும் அவர் நினைவில் படலமாடுகிறது? என்னோடு அவள் விளையாடிய கண்ணாமூச்சி, நடித்த நாடகங்கள், கதைகளாகச் சொல்லி விட்டு விட்ட நிகழ்ச்சிகள் இவைதாம் அவள் வாழ்க்கையிலும் அங்கங்களாக இருக்குமோ?
கற்பனை மண்ணில் ஒரு வித்து விழுந்தது. காலம் கடந்து விழித்த அவர்களுடைய உணர்வு என் கண்ணுக்கு அன்று தெரிந்து இனம் விளங்காத உணர்ச்சிகள் உருவம் பெறாத உணர்ச்சிகளைப் போலவே குறையாக நின்றுவிட்ட கௌரியின் வாழ்க்கை இவை கற்பனை வடிவம் பெற்று நிழலாடத் தொடங்கின.
“உணர்வின் விழிப்பு” நாவல் பிறந்தது.
- எஸ். லட்சுமி சுப்பிரமணியம்.
லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.
படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.
Rent Now