Home / eBooks / Unmaiyin Darisanam
Unmaiyin Darisanam eBook Online

Unmaiyin Darisanam (உண்மையின் தரிசனம்)

About Unmaiyin Darisanam :

'

நான்’ இல் ஆரம்பித்து ‘எழுத்தாளன் பாடும் கீதம்' வரைக் காலவீச்சு ஏறக்குறைய நாற்பது வருடங்கள்.

'சொல்லோடு என் உறவு' இந்தக் கட்டுரை ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன், தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகம் நடத்திய இலக்கியப் பட்டறையில் நான் படித்தது. அவர்கள் எனக்குக் கொடுத்த தலைப்பு (The word and the creative process) கேட்டவர்கள், அப்பவே, அது கதைப் பாணியில் அமைந்திருப்பதாகச் சொன்னார்கள். தொகுதியிலேயே நீளமான கட்டுரை. பெர்னாட்ஷா கட்டுரையின் நீளத்தை நான் ஒப்புக்கொள்வதோ ஒரு தப்பு, பலவீனம் என்று உறுமுவது என் உட் செவியில் கேட்கிறது. நானும் மன்னிப்புக் கேட்கவில்லை. சொல்லோடு என் அனுபவம், எழுத்தாளர்களுக்கு, ஏன் வாசகர்களுக்கும் தான் பயன் படக்கூடும் என்கிற எண்ணம் தான்.

இப்போது இன்னொன்றும் புலப்பட்டது. புத்தகத்தின் பிற்பகுதியில் 'The spirit of man' என்கிற ப்ரயோகம், சற்றுக் கூடுதலாவே அடிபடுகிறது போல எனக்குத் தோன்றுகிறது. இதை நேர்த் தமிழ்ப்படுத்தும் என் முயற்சியில் ‘ஆத்மாவின் உத்வேகம், தேடல் துடிப்பு’ மொழி பெயர்ப்பு ஈடு கொடுக்கிறதா? ஊஹும். திருப்தியில்லை. ஆத்மா என்பது Spirit ஆவது ‘மனித ஆவேசம்?' இன்னும் சற்று நெருக்கமாகப் பொருந்தலாம்? ஆனால் நம் பண்பாட்டு முறையில் பழக்கமுறையில் பாரம்பர்ய முறையில் ஆத்மாவுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்கிற சித்தத்தில் அதன் மேலேயே எல்லா சுமைகளையும் ஏற்றிவிடுகிறோம். அந்த முறையில், உத்வேகத்துடன், தேடல் துடிப்புடன், ஆத்மாவின் கர்வத்தையும் சேர்த்துக் கொள்கிறேன். சரி, ஆத்மாவுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்பதால், என்னுடைய கர்வமாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே!

ஆகவே, The spirit of man, இந்தத் தொகுப்பின், ஏன் பூரா என் எழுத்தின் உள் சரடாக, உயிர் நாடியாக, ஜபமணியாகத் திகழ்வது தெரிகிறேன். மனம் எப்படிப் பழக்கப்பட்டிருக்கிறதோ அப்படித் தான் நினைப்பு. நினைப்பின் படித்தான் அதன் எழுத்து.

இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கத்தைத் தொகுத்துக் கொடுத்த உதவி சப்தரிஷியை (லா. ரா)ச் சாரும்.

About La. Sa. Ramamirtham :

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.

லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.

அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.

Rent Now
Write A Review

Same Author Books