Home / eBooks / Unnidam Mayangukirean
Unnidam Mayangukirean eBook Online

Unnidam Mayangukirean (உன்னிடம் மயங்குகிறேன்)

About Unnidam Mayangukirean :

இனிய வாசக சிநேகிதத்திற்கு,

வணக்கம். வாழிய நலம்.

இது வெறும் கடிதமல்ல. ஒரு முன்னுரை. கடித வடிவான முன்னுரை.

எழுத்தாளருக்கு எழுத்தாளர் முன்னுரை எழுதிக் கொடுப்பதில் என்னளவில் ஒரு சந்தோஷம். இது வெறும் சம்பிரதாயச் சந்தோஷமல்ல. முன்னுரை எழுதுகின்ற எழுத்தாளன் வாசகனாகும் வசதி இதிலிருக்கிறது. வாசகனாக இல்லாது போனால் எழுத்தாளன் மலருவது கடினம்.

படைப்பாளி வித்யா சுப்ரமண்யம் அவர்களை எழுத்தாளராய் மட்டுமில்லாது ஒரு ஸ்நேகிதியாகவும் நான் உணர்கிறேன். என் குடும்பத்தினரோடு நெருக்கமுள்ளவராகவும் அவர் இருந்திருக்கிறார்.

''என்ன உடம்புக்கு கமலாவுக்கு, உனக்கு காசு தேவைப்படுமே தரட்டுமா?'' என்று கண்களில் கனிவு தோன்ற அவர் கேட்ட வினாடியை நான் மறக்க முடியாது. அவர் வீடு சிறியது. ஆனால் சுகந்தம். எழுத்தாளர் என்ற பந்தா கொஞ்சம் கூட இல்லாத முகம். இடுப்பில் அடுப்புத் துணியோடு காய்கறி நறுக்கி, எதிரே புத்தகம் பிரித்து உட்கார்ந்து பெண்ணுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து, வந்தவளுக்கு காபிபோட ஓடும் அவசரத்தில் ஒரு குடும்பத் தலைவியின் வேகத்தைக் கவனித்திருக்கிறேன். ஜன்னலோரம் எழுதப்பட்ட நாவல் பேப்பர்களும், நேர் எதிரே அடுக்கடுக்காய் பாடல் கேஸட்களும், ஒரு பக்க சுவர் முழுக்க அவர் வரைந்த தைல ஓவியங்களும், சின்ன கண்ணாடிப் பெட்டியில் காலஞ் சென்ற அவர் அப்பாவின் செருப்புகளும் அவரை வெறும் எழுத்தாளியாய் எனக்குக் காட்டவேயில்லை.

இன்றைய பெண்களின், அனேகமாய் மத்தியதர வகுப்புப் பெண்களின் மனோநிலையை அவர் குரல் உரக்கக் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.

மரபு மீறுகின்ற வசதிகள் ஏற்படினும், ஆசை ஏற்படினும் மீற முடியாத ஏதோ ஒன்று பற்றி அவர் கதையின் பெண் பாத்திரங்கள் குழம்பும். போன தலைமுறையின் தாக்கமும், இந்த தலைமுறையின் வேகமும் முரண்படுவது போல் நிற்கும். இந்த முரண் தலைமுறை தலைமுறையாய் தொடர்வது எனினும் இந்த முரண்படலின் லாப நஷ்டமென்ன என்று உடனே கணக்குப் போடும். காதலிக்கிறபோதே இந்தக் காதல் நேரம் வரை தன் உயர்வுக்குக் காரணமாய் இருந்தவர்களை இவர் பாத்திரங்கள் நினைவுகூறும்.

இந்த நாவலிலும், இந்த முரண்படுதலின் வேகம்தான் கருப்பொருள். இந்த முரண் அவளுக்கு ஏன் ஏற்பட்டது என்பதற்கு செழுமையான காரணங்களும் காட்டப்படுகின்றன. சுயநலத்துக்கும், உறவு நலத்துக்கும் உண்டான போராட்டம் ஏற்பட்டு விடுகிறது. இந்தக் கதாநாயகியின் முடிவு பற்றி விவாதங்கள் வாசகர்களுக்குள் ஏற்படக்கூடும். ஆனால் அந்த பாத்திரத்தின் முடிவு அந்தப் பாத்திரத்தின் வகையிலிருந்து சரி அவள் வளர்ந்த விதத்தோடு கணக்கிட்டுப் பார்த்தால் அதுவே நல்ல முடிவு அந்த முடிவு நோக்கியே கதைக்கு வலுவேற்றப்பட்டிருக்கிறது.

கதையின் முடிவே கதாசிரியரின் கருத்தாக நான் குழப்பிக் கொள்ளவில்லை. மாறாய் ஒரு முடிவை, அல்லது ஒரு கருத்தை இந்தக் கதாசிரியர் பின்னோக்கி ஆராய்ந்திருக்கிறார் என்று கருதுகிறேன்.

திருமதி வித்யா சுப்ரமணியம் அவர்களின் எழுத்து ஒரு இதமான நீரோடை. பெரிய பிரமிப்புகள் இதில் ஏற்படாது. தத்துவ அலைகள் எகிறாது. ஒடுகின்ற நீரோடையைப் பார்த்துக் கொண்டேயிருக்கிற சுகம்போல், அப்படிப் பார்க்கும் போது எல்லாமே மறந்து மனசு நீரோடையாகவே மாறி விடுவது போல் ஒரு கதைச் சுகம் இதில் இருக்கும். வித்யா சுப்ரமணியம் பரபரப்பான பெண்மணி அல்லர். அவர் நாவலும் அவர் போலவே அமைதியானது. அமைதியே அழகென்று உணர்ந்தோருக்கு இந்நாவல் நிறைவை நிச்சயம் கொடுக்கும்.

இந்த படைப்பாளி என் குடும்ப ஸ்நேகிதி என்பதால் இவர் படைப்புகளுக்கு பெரிதும் உதவியாக இருந்து ஊக்கப்படுத்தி வரும் திருமதி. வித்யாவின் கணவர் திரு. சுப்பிரமணியத்திற்கும் என் பாராட்டையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுற்றியுள்ள உறவுகளை மேன்மைப்படுத்தி வாழ்கிற போதுதான் மேன்மையான விஷயங்களோடு பரிச்சயமும் கிடைக்கும், மேன்மையான விஷயங்களைப் படைக்கவும் முடியும்.

திருமதி. வித்யா சுப்ரமணியம் மேன்மையுடன் வாழ்ந்து மேன்மை தொடர்ந்து படைக்க என் சத்குரு நாதனைப் பிரார்த்திக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
பாலகுமாரன்

About Vidya Subramaniam :

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.

Rent Now
Write A Review

Same Author Books