A. Tamilmani
பாரதியிலிருந்துதான் தமிழ் இலக்கியம் மக்கள் பிரச்சனைகளைப் பேசத் தொடங்கியது. அப்படிப் பேசுகின்ற பொழுதுகூட தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு பேசாமல் மக்கள் பிரச்சனைகளை மக்களோடு இணைந்து நின்று குரல் கொடுத்ததுதான் பாரதியின் சிறப்பு. இந்தத் தேசம் எப்போது வெள்ளையரிடமிருந்து விடுபடும் என்பது அந்தக் காலகட்டத்தில் தேசப் போராட்டத்தின் திலகங்களாகத் திகழ்ந்த லாலா லஜபதிராய், திலகர், விபின் சந்திரபாலர் போன்றவர்களுக்கே தெரியாது. ஆனால், மகாகவி பாரதிக்கு மட்டும்தான் இந்தத் தேசம் விடுதலை காணும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் விடுதலைக்கு சுமார் 20 ஆண்களுக்கு முன்பே பாரதி.
"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று''.
என்று எழுதினான். அதுவும் 'ஆடு பள்ளுப்பாடு' என்று மக்களுக்கு ஆணையிடாமல், 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!' என்று தன்னையும் இணைத்துக் கொண்ட மாண்புதான் பாரதியை மகாகவியாக்கியது; இன்றும் அவனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது; எதிர்காலத்திலும் அவன் வாழ்வான்...
அதேபோன்று இந்த மண்ணில் நடக்கும் பல கொடுமைகளை தன் கட்டுரையில் கோடிட்டுக் காட்டும் வழக்குரைஞர் தமிழ்மணி தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், தன்னை இணைத்துக் கொண்டு குரல் கொடுப்பது அழகு...