Home / eBooks / Uravai Thedi
Uravai Thedi eBook Online

Uravai Thedi (உறவைத் தேடி)

About Uravai Thedi :

இதிலுள்ள சிறுகதைகள் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவை. அந்தந்தச் சூழ்நிலையிலிருந்த மனோ பாவங்களையும், தார்மீக நியாயங்களையும் பிரதிபலிப்பவை. கற்பனையில் பிறந்த கதாபாத்திரங்கள்தான் என்றாலும் சில நாயக நாயகிகள் என் மனதில் நிலைத்து நின்றுவிட்டார்கள்.

தன் ஏழ்மையிலும் தான் படைத்த லட்சிய கதாபாத்திரத்தின் உன்னதம் சிதைந்துவிடக் கூடாது என்று நினைக்கும் திலீபன், வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எப்படி அமைந்ததோ அதை ஏற்றுக் கொள்ளும் ஜோதிநாதன், தொலைந்து விட்ட உறவுகளால் எப்போதும் தாழ்வு மனப்பான்மைக்குள் அழுந்திக் கிடக்கும் அபிஷேக், அவனுக்கு உறவு என்கிற வார்த்தைக்கான உண்மைப் பொருளைப் புரியவைக்கும் ரேகா, சுதந்திரப் பறவையான துணிச்சல் நிறைந்த பெண் சுஷ்மா, தன் தாய் தன்னைப் புறக்கணித்த காரணத்தைத் தேடி பம்பாய் செல்லும் சிறுமி நிம்மி என்று இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். எழுதுவது என்பது ஓர் இனிமையான அனுபவம். நானும் எழுத வேண்டும் என்கிற என் எண்ணத்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது பல பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள். அப்படிப்பட்டவர்களில் திரு எஸ். லட்சுமி சுப்பிரமணியம் முக்கியமானவர். - (எஸ்.எல்.எஸ்) - அவருடைய கட்டுரைகள், கதைகள், புதினங்கள் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படித்துவிடுவேன்.

ஆரம்பத்திலிருந்தே நான் அவருடைய எழுத்தின் ரசிகை. தெளிந்த நீரோடை போன்ற தமிழ்நடையில் சுவாரஸ்யம் குன்றாமல் கதை சொல்லுவது அவருக்குக் கைவந்த கலை. எஸ்.எல்.எஸ், பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளரும் மட்டுமல்ல. பொறியியல் வல்லுனராகத் தமிழக அரசில் தலைமைப் பொறியாளர் பதவியை வகித்தவர். ஆன்மீகம், மருத்துவம், மனோதத்துவம், பயண அனுபவம் வரலாறு, விஞ்ஞானம், கட்டிடக்கலை, சிறுகதைகள், நாவல்கள் என்று எழுத்தில் இவர் தொடாத விஷயமே இல்லை. சுமார் தொண்ணூறு புத்தகங்களை எழுதி, இன்னமும் தன் எழுத்துலகப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவர் இவர்.

1972ஆம் ஆண்டு குடும்பத்துடன் நான் பெங்களூர் சென்று கொண்டிருந்தபோது முதல் முறையாக அவரைச் சந்தித்தேன். தான் இன்னார் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே அவர் என் எழுத்தைப் புகழ்ந்ததும், அவர் பிரபல எழுத்தாளர் லட்சுமி சுப்பிரமணியம் என்பதை நான் தெரிந்து கொண்டபோது பிரமித்ததும் மறக்க முடியாத அனுபவம். அதன்பின் அவர் எங்கள் குடும்ப நண்பரானார்.

என்னை நிறைய எழுதும்படி உற்சாகப்படுத்துவார். என் முதல் சிறுகதைத் தொகுப்பான 'பிரம்மோபதேசம்' வெளியாவதற்கு அவர்தான் காரணமாக இருந்தார்.

சுயவிளம்பரமோ, தன் சாதனைகளைக் குறித்த அகந்தையோ சிறிதும் இல்லாத அமைதியான அவர் குணம் எல்லோரையும் எளிதில் கவர்ந்துவிடும்.

அத்தகைய சாதனையாளர் என் சிறுகதைத் தொகுப்பிற்கு அணிந்துரை வழங்க இசைந்தது என் எழுத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம். அதற்காக எஸ்.எல்.எஸ். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

லக்ஷ்மி ரமணன்

About Lakshmi Ramanan :

இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.

விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.

இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.

கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.

இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books