நாலு தலைமுறைகளின் காலவீச்சுகள் அடங்கிய இக் கதைகளை, அவை தோன்றிய வரிசையில் கிரமப்படுத்தவில்லை. இந்தக் கலவை, இப்படியும் ஒரு ருசி இருந்துவிட்டுப் போகட்டுமே! வாயுள்ள பிள்ளை எங்கிருந்தாலும் பிழைத்துக் கொள்ளும்.
ஆனால் இரண்டு கதைகளை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அவை தோன்றிய வழியில் அல்ல. அவை என்னை கிளர்ந்த வழியில்.
உத்தராயணம் என்றாலே எனக்கு முன்னால் நினைவுக்கு வருவது பீஷ்மன்தான். பீஷ்மனின் தனிமை. தனித்தன்மை வாய்ந்தது. பிறக்கையிலேயே ஆதர்ஸ புருஷன். தன் பிரம்மசரிய சபதத்தினால் மனிதப் பிறவியிலேயே கடவுள் தன்மையை எய்து விட்டான்.
சாதாரணமாகவே, லோகாதயமான செல்வங்களிலேயே, அல்லது ஆத்மகதியில் சற்று முன்னேற்றம் கண்டு விட்டால் முதலில் உணருவது தன் தனிமை தான். அந்த நிலையில், பிறறின் தன்மைக்குத் தக்க, தான் குனிய முடிவதில்லை. பிறரின் பக்குவநிலையும் விதிப் பயனும் வெவ்வேறுபடுவதால் அவர்களாலும் புரிந்துகொள்ள முடிவதில்லை. கடவுள் தன்மையென்பதே இதுதானோ?
தன் சோதனைகளுக்கு மேலோங்கி, ஆலமரத்தின் தன்னந் தனியன் யமனே அணுக அஞ்சும், தேவரும் வணங்கும் தவத்தினன். ஆனால் பிதாகமரின் அந்திம காலம் அவல காலம். சொன்ன பேச்சைக் கேளாத பேரன்மார்கள். நியாயம் இருக்குமிடம் தெரிந்தும், தான் எடுத்துச் சொன்னால் செல்லாது என்கிற தலைகுனிவில், அடைத்துப்போன வாய். கடைசிப் போரில், கிழட்டுச் சிங்கத்தின் வீரத்துக்கு, பாண்டவர் உள்பட யாருமே எதிர்நிற்க முடியவில்லை. ஆனால் அத்தனை சௌரியமும் என்னவாயிற்று? ஒரு பேடியின் கணையால் சரப்படுக்கையில் வீழ்ந்ததுதான் கண்ட மிச்சம், இதற்கு விளக்கங்கள், புதைந்த பொருள்கள், ஆயிரம் உண்மைகள் - அத்தனையும் வேறு தடம். ஆனால் நாம் மனிதர். நம் திகைப்பு: பீஷ்மனின் கதியே இப்படியென்றால் நாம் எந்த மூலை? இந்தத் திகைப்பு ஓய்ந்தபாடில்லை. ஏனெனில் பாரத யுத்தம் ஓயவில்லை. நாம் இன்னும் குருக்ஷேத்திரத்தில்தான் இருக்கிறோம். காங்கேயர்கள் வீழ்ந்தவர்கள் வீழ்ந்தபடி, சரப்படுக்கை அன்று விரித்தது இன்னும் விரித்தபடி, வாழ்க்கையின் லக்ஷியம், நடப்பு, முடிவு எல்லாமே சரப்படுக்கையில் தானோ? இந்தக் கேள்வி திரும்பத் திரும்பத் தன் கடையலில் இதுவே ஒரு நியாயமாக ஸ்தாபனமாகிறார் போல் தோன்றுகிறது.
அகிலா, உண்மை நிகழ்ச்சியின் அடிப்படையில் நெய்த கதை. என் நெசவுகூட சொல்லும்படியாக இல்லை. யதார்த்தத்தின் விபரீதம், கொடுமை, மண் மையினின்று அதன் காவிய சோகத்தைப் பிரிப்பதற்கு, என் கலையின் உரிமையில் சம்பவங்களின் முன்பின்னைச் சற்று மாற்றியிருக்கிறேன். மற்றபடி பெயர்கள் உள்பட அப்பட்டம் காப்பாற்றப்பட்டிருக்கிறது.
எழுத்தைச் சாதகம் செய்து கொண்டிருப்பதில், எனக்குக் கிடைத்த பெரும் பேறு, மனித மாண்பை அதன் தருணங்களில் அவ்வப்போது தரிசனம் காண்பதுதான். இது விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன்.
புண்ய காலம் என்று ஒன்று தனியாக உண்டா என்ன? இவைகளைப் பற்றி எனக்குச் சொல்லக் கிடைக்கிறதே, சொல்வதில் ஒரு ஸ்னான துல்லியம் ஏற்படுகிறதே. இதுதான்.
புண்ணிய காலங்கள் நேர்ந்து கொண்டே இருக்க வேணும்.
லா. ச. ராமாமிருதம்
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.
லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.
லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.
அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.
Rent Now