Mukil Dinakaran
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியிலிருக்கும் அந்த விஸ்வா காம்ப்ளக்ஸில் தொடர்ந்து இரவுக் காவலர்கள் மரணமடைந்து கொண்டேயிருக்க, காவல் துறை துப்புத் துலக்குகின்றது. பக்கத்து காம்ப்ளக்ஸ் செக்யூரிட்டி அதெல்லாம் பேய்களின் வேலை என்கிறான். முதலில் மறுக்கும் ஏ.சி.தீனதயாள் அங்கு நடக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து பார்த்து நம்ப ஆரம்பிக்கிறார். பேய் மற்றும் ஆவி ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முகிலனையும், அவன் காதலி ராதிகாவையும் உண்மை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்துகிறார்.
அந்தப் பணியின் போது முகிலன் பேய்களால் சாகடிக்கப்படுகிறான். ஆனால், அவன் சாகடிக்கப்படும் காட்சிகள் மொத்தமும் காமிராவில் பதிவாகியிருக்க, பேய்களின் வேலைதான் என்பது உறுதியாகின்றது.
கேரளாவிலிருந்து நம்பூதிரி வரவழைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட, காம்ப்ளக்ஸ் சுவர்களுக்குள் பிணங்களை வைத்துக் கட்டிய உண்மை தெரிய வருகின்றது. போலீஸ் காம்ப்ளக்ஸின் கட்டுமானப் பணிகளை செய்த எஞ்சினீயரை சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கின்றது.....
சஸ்பென்ஸ் கதையின் இறுதியில் வெளிவருகின்றது. நாவலைப் படியுங்கள்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.