Home / eBooks / Uyirizhai
Uyirizhai eBook Online

Uyirizhai (உயிரிழை)

About Uyirizhai :

திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் ஊறிய எனது தந்தை பாவாடை, தாயார் பாக்கியம், என்னை, என் தங்கைகளையெல்லாம் சாதி, மத மூடநம்பிக்கைகளை யெல்லாம் கடந்து வழி காட்டினார்.

கல்லூரியில் படித்த சமயம் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய பா. கல்யாணி விழுப்புரத்தில் கலை இலக்கிய அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். ஒரு ஞாயிற்றுக்கிழமை, இரண்டாம் கூட்டத்தில் பேராசிரியர்கள் கல்யாணி, பழமலய் மற்றும் பாலு. ஞானசூரியன், இரவிகார்த்திகேயன், அன்புசிவம், சொக்கலிங்கம், நான் என ஒரு பத்துப் பேர் கூடி ஒரு கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தினோம்.

புரட்சிகர அரசியலின் பால் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட கல்யாணியின் முன்முயற்சியோடு ‘நெம்புகோல் மக்கள் கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கம்' என ஆரம்பித்தோம். வாராவாரம் கூடிக் கதை, கவிதை, கட்டுரை எழுதி வந்தவர்களைப் படிக்கச் செய்தும், பத்திரிகைகளில் வந்தவற்றைப் பற்றிய கருத்துக்கணிப்பும் விமர்சனமுமாகக் கூட்டம் நடைபெறும்.

'நெம்புகோல்' என்னும் கையெழுத்துப் பிரதியில் முதலில் ஒரு சில கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அரசு, அரசும் புரட்சியும், வால்கா முதல் கங்கை வரை, என்ன செய்ய வேண்டும்? குடும்பம் தனிச் சொத்து... இப்படித் தொடங்கி கி.ரா. பிரபஞ்சன், சூரியதீபன், நாஞ்சில் நாடன், இன்குலாப், அப்துல்ரகுமான், வைரமுத்து, மேத்தா. இந்திரன், மீரா, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரம்மராஜன், செ. கணேசலிங்கன், செ.யோகநாதன், கோ.கேசவன், அ.மார்க்ஸ்... என நீண்ட பட்டியலில் புத்தகங்கள் தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.

பா. செயப்பிரகாசத்தின் 'காடு’ தொகுப்பை படித்துப் பல இரவுகள் தூங்க முடியவில்லை. அதுமுதல் சிறுகதை எழுத நினைத்து ஒன்றிரண்டு எழுதுவதும், 'நெம்புகோல்' அமைப்பில் வைத்துப் படிப்பதும், பின் சரியில்லாதவற்றை உடனடியாக கிழித்துப் போடுவதும் வழக்கமாக இருந்தது.

ஒடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி குறிப்பாக நான் சார்ந்த அடித்தட்டு மக்கள் வாழ்க்கையின் அவலங்களைக் கதையின் கருப்பொருளாக வைத்து மே 81-ல் எழுதத் தொடங்கினேன். எங்கள் தெருக்குடிசைகள் எரிந்தபோது, உடைமைகளோடு எனது பல படைப்புகளும் எரிந்து போயின.

நானும் நண்பனும் ஒரு தற்காலிக வேலை கேட்டுப் பொறியாளரைப் பார்க்க வாடகை சைக்கிளில் போய் வந்து அறுபது பைசாவில் பதினைந்து பைசா கடன் சொல்லிவிட்டு வந்த அவல நிலையை வைத்துச் 'சங்கடம்' என்ற கதையை எழுதினேன். அதைக் கணையாழிக்கு அனுப்பி, ஜூன் 84-ல் அது வெளிவந்ததும் எனக்கு மட்டுமல்ல. 'நெம்பு கோல்’ நண்பர்களுக்கும் சந்தோசம். இரண்டாவது கதையும் ஒரு விதவைப் பிரசவம் என்ற தலைப்பில் மே 85 கணையாழியில் வந்ததும் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.

ஆசிரியர் பொறுப்பேற்று ‘மனஓசை'யை அக்.83 மாணவர் சிறப்பிதழாக வெளிக்கொண்டு வந்தேன். 'தோழமை' என்றொரு கலை இலக்கிய இதழை ஆசிரியர் குழுவிலிருந்து ஆறு இதழ்கள் கொண்டு வந்தேன்.

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் தலித் இலக்கியக் கருத்தாக்கங்கள் உருவான நேரத்தில் எனது முதல் சிறுகதைத் தொகுப்பு 'நந்தனார் தெரு' (டிச.91) வெளிவந்தபோது பலரின் கவனத்தைத் திசை திருப்பியதை என்னுடைய எழுத்தின் முதல் வெற்றியாகக் கருதினேன்.

புரட்சிகர வட்டாரமல்லாது தி.க.சி. வே.சபாநாயகம் போன்ற பலர் முற்போக்கு வட்டாரங்களிலிருந்து விமர்சனமும் கருத்துகளும் தெரிவித்தார்கள். 'வதைபடும் வாழ்வு' (டிச.94), 'தாய் மண்' (டிச.96) என அடுத்தடுத்துப் புத்தகங்கள் வெளிவந்தன.

'தினமணி சுட’ரில் (6.8.94) 'நம்பிக்கை நட்சத்திரம்' என நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். 'தலித் இலக்கியம்: புதிதாய் ஒரு குரல்' என்னும் தலைப்பிட்ட 31.12.94 தினமணி சுடரில் ‘சோறு' என்ற எனது கதை வெளிவந்தது. 'இந்தியாடுடே', 'புதிய பார்வை', 'அரங்கேற்றம்', 'செம்மலர்', 'தாமரை' என்று பல இதழ்களில் பரவலாக எழுதினேன்.

நூற்றுக்கு மேற்பட்ட கதைகள் எழுதியிருந்தாலும், பரிசுகள், விருதுகள் எனப் பெற்றிருந்தாலும், சாகித்ய அகாதெமி சென்னையில் கதை வாசிக்கப்பட்டு தொகுக்கப்பட்டாலும், சாகித்ய அகாதெமியால் (புது தில்லி) கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டாலும், ‘இன்தாம்' இன்டர்நெட் வரை கதை வெளிவந்தாலும் ஆரம்பகால அந்தச் 'சங்கடம்' சிறுகதையில் நிச அனுபவம் கதையாகி நின்றதை மறக்க முடியவில்லை

பேராசியர் கல்யாணியால் ஊக்கம் பெற்றவர்கள் நிறையபேர் உண்டு. அவரது அரசியல், கலை இலக்கிய மாணவனாக உருப்பெற்று அவரது கனவெனும் விதை துளிர்த்துச் செழித்து மரமாகிப் பூத்துக் காய்த்துக் கனியும் சூழலில் அந்தச் 'சங்கடம் 'மட்டுமல்ல, எந்தச் சங்கடத்தையும் இலக்கியரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்கிற லட்சியமே தினமும் என்முன் தெரிகிறது.

1.10.2000-தினமணி கதிர்
- விழி. பா. இதயவேந்தன்

About Vizhi Pa. Idhayaventhan :

விழி பா. இதயவேந்தன் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், வீதிநாடகம் என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர். இவரின் படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இதழ்களில் வெளி வந்துள்ளது. இந்தியா டுடே, கணையாழி, தினமணி கதிர், அரங்கேற்றம், தினப்புரட்சி, நான்காவது பரிமாணம் (கனடா), சதங்கை, இந்தாம் (மின்னிதழ்), மின்னம்பலம் (இணைய இதழ்) போன்று பல்வேறு தளங்களில் எழுதியுள்ளார்.

சென்னை சாகித்ய அகாடமியில் கதை, வாசிப்பு மற்றும் தமிழில் நவீன சிறுகதைகள் தொகுப்பில் கதை இடம் பெற்றுள்ளது. புது டெல்லி மற்றும் சாகித்ய அகாடமியின் இதழில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரள ஜனநாயகம் மாத இதழில் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் சிறுகதைகளில் ஆறு இளம் முனைவர் (M. Phil.,) பட்டத்திற்க்கும், ஒருவர் முனைவர் (Ph.D.,) ஆய்வும் மேற்கொண்டு முடித்துள்ளனர். சென்னையிலுள்ள 'தலித் முரசு' பத்திரிக்கையில் இணை ஆசிரியராகவும் உள்ளார்.

இவரைப் பற்றி பழ மலாய் அவர்கள் எழுதி உள்ள குறிப்பு:

விழுப்புரத்தில், அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர், அவர் களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலி யாகிப் போகாமல், தங்கள் இருப்பை, மன சாட்சிக்குத் துரோகம் செய்யாமல், எண்ணி எண்ணிப் பார்க்கிறார். அவர்களோடு சேர்ந்து போராடுகிறார். இந்த நிகழ்வுப் போக்கில் தான், இவர், நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கிறார், வீதி நாடகங்களில் நடிக்கிறார், செய்திக் கட்டுரைகள் எழுதுகிறார், கவிதை, கதை, நாவல் - என்று வரைகிறார்.

அனுபவ மண்ணில் வேர்பாய்ச்சி, அழகி யல் வானில் கிளை பரப்புவதாலேயே இதய வேந்தனுடைய எழுத்துக்களை நாங்கள் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்கிறோம்.

- பேராசிரியர் பழ மலாய்

Rent Now
Write A Review

Same Author Books