Home / eBooks / Uyirkaadhal
Uyirkaadhal eBook Online

Uyirkaadhal (உயிர்க்காதல்)

About Uyirkaadhal :

இது டாம் டிக்வரின் “ரன் லோலா ரன்” என்கிற ஜெர்மானிய திரைக்கதையை தழுவி படைக்கப்பட்டிருக்கிற நாவல். புராண காலத்தில் விதியை மதியால் வென்று, சாவித்திரி தன் காதலன் சத்தியவான் உயிரை காப்பாற்றுகிறாள். இங்கே விஞ்ஞான காலத்தில் லோலா தன் காதலன் எபி உயிரை ஒரு பெரிய சிக்கலில் இருந்து முற்றிலும் புதிய உத்தியில் எப்படி காப்பாற்ற யத்தனிக்கிறாள் என்பதை காதல் ததும்ப படம் பிடித்துக்காட்டுகிறது இந்த நாவல்.

இது ஒரு மர்மக்கதையின் சுவாரஸ்யத்தோடு மின்னல் வேகத்தில் பயணிக்கும் வித்யாசமான காதல் கதை. கயாஸ் தியரி முதலான சித்தாந்தங்கள் இதன் பின்புலத்தில் இருந்து இயக்குகின்றன. ஒரே நிகழ்வு மூன்று வெவ்வேறு விதங்களில் மூன்று வெவ்வேறு வித்யாசமான முடிவுகளோடு ஒரே நேரத்தில் அரங்கேறுகின்றன. கதை முடிவடையும் தருணம் மறுபடி துவக்கப் புள்ளிக்குச் சென்று விடுகிறது. மீண்டும்மீண்டும் அதே விளையாட்டை வேறுவிதமாய் ஆடிப் பார்க்கத் தயாராகி விடுகிறது. அதனால் கதையின் மாந்தர்களும் அதில் பங்கெடுத்துக் கொண்டு தானே ஆகவேண்டும். துவங்குகிற கணங்களின் சிறுசிறு மாற்றங்களுக்கேற்ப கதை மாந்தர்களின் பயணிப்பில் மாற்றங்களை சந்திக்கிறார்கள். சரியான கணங்களை நிர்மாணித்து தன் வசப்படுத்துகிறவர்கள்

இந்தக் கதை “ப்ராபபிலிட்டி” அல்லது சாத்தியங்களின் நிலைபாட்டுத்தன்மை குறித்து காதல் மூலம் அலசுகிறது. நழுவ விடும் கணங்கள் வாழ்வியல் போக்கை வெவ்வேறு விதமாக மாற்றியமைத்துக் கொண்டேயிருக்கின்றன. இதன் எளிய உதாரணமாக இந்நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதுவே கோடானுகோடி சங்கிலித்தொடராய் உறவுக்கலப்பின் “பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷன்” வெளிப்பாடாய் எப்படிப்பட்ட நிகழ்வுகளை ஏற்படுத்தும் என்று வரிசைக்கிரமப்படுத்துவது கொஞ்சம் திகிலான சமாச்சாரம். அதனை உணர்ந்து கொள்ள கொஞ்சம் சுவாரஸ்யான கற்பனை வளம் தேவைப்படத் தான் செய்கிறது. ஒவ்வொரு கணத்தின் மூலத்திற்கு பின்னோக்கிச் சென்று பார்க்கிற ஒரு ஆய்வைபோல, பல்லாயிரம் கோடி கணங்களின் மூலத்திற்கு பின்னோக்கிச் சென்று பார்க்கக்கூடிய ஒரு கணித வழியின் பாதையில் சென்று பார்த்தால் என்ன பிடிபடுமோ அதை சம்பவங்களின் வெளிப்பாடுகளாலேயே கைவசப்படுத்தியிருக்கிறது இந்நாவல்.

லோலாவின் மனதிற்குள் அழுத்தமாய் பதிந்திருக்கிற காதலின் நம்பிக்கை புள்ளி, படிப்படியாய் அதன் நம்பிக்கைத் தளத்தை விரிவு கொள்ளச் செய்து, தொடர் தோல்விகள் கடந்து, காதலன் எபி சிக்கியிருக்கும் உயிர்ப்போராட்டத்தில் இருந்து அவனை மீட்டெடுக்கும் சூத்திரம் தேடுகிறது. விதியை மதியால் வெல்ல யத்தனிக்கிறது. இந்த முடிச்சுகளுக்கிடையில் உள்ள கணித சூத்திரத்தின் பின்னணியாக இயங்குகிறது கயாஸ் தியரி. அந்த சித்தாந்தத்தின் நுட்பத்துடன் இந்த நாவல் இருந்தாலும், அதை மிக எளிமையான வடிவில் படைக்கப்பட்டிருப்பது இதன் பிரத்யேகச் சிறப்பு.

லோலா ஆனாலும் அபாரமான காதல் உணர்வு அவளை இந்த அபாயமான விளையாட்டிற்குள் உந்தித் தள்ளுகிறது. சிக்கலுக்குள்ளாக்குகிறது. அவள் தொடர்ந்து அந்த விளையாட்டின் கணங்களை மாற்றியமைத்து, தான் எதிர்பார்க்கிற நிகழ்வை நோக்கி ஓடுகிறாள். எட்டாமல் மயிரிழையில் அவை நழுவுகிறபொழுதுகளில் நம்பிக்கையை விடாமல் துரத்துகிறாள்.

இந்நாவலோடு “முதல் முத்தம்” என்கிற காதல் சிறுகதை கூடுதலாக தரப்பட்டிருக்கிறது. பென் ப்ரையன்ட் எழுதிய “ஆப்ரிகாட்” என்கிற குறுந்திரைக்கதையை தழுவி படைக்கப்பட்ட சிறுகதை. எல்லோருக்குமே முதல் முத்தம் என்பது மறக்க முடியாத ஒன்று தான். அந்த முத்தம் மனதின் ஆழத்தில் அழியாமல் பொறிக்கப்பட்டேயிருக்கும். அப்படிப்பட்ட ஒரு முதல் முத்தம் செய்யும் மாயம் தான் இளமை துள்ளும் இந்த அற்புதமான காதல் சிறுகதை.

நிச்சயம் இரண்டும் உங்கள் இதயத்தை மின்னல் வேகத்தில் திருடிக்கொண்டு விடும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இது காதல் மீது சத்தியம்.

நேசத்துடன், தி. குலசேகர்

About Kulashekar T :

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Rent Now
Write A Review

Same Author Books