Home / eBooks / Vaakkumoolam
Vaakkumoolam eBook Online

Vaakkumoolam (வாக்குமூலம்)

About Vaakkumoolam :

எனக்குத் தோட்டக்கலையில் மிகுந்த ஆர்வம் உண்டு. தோட்டத்தை உருவாக்கும் பணிக்கும் படைப்பிலக்கிய பணிக்கும் அபூர்வ ஒற்றுமை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. சிறுகதை எழுதும் அனுபவமும் அத்தகையது. திடீரென்று மனத்தில் பொறி ஒன்று பற்றும். அதைக் கதைக் கருவாகப் பயன்படுத்தக் கற்பனை விரியும். கை தானாக எழுதிக்கொண்டு போகும் நம் கட்டுக்குள் அடங்காததுபோல. கதை நிறைவு பெற்றதும் நெஞ்சின் சுமை இறங்கியதுபோல இருக்கும். சிறுகதையை ஆரம்பிப்பது சிரமம் என்றால் முடிப்பது அதைவிட சிரமம்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகளை எழுதும்போது அத்தகைய அனுபவங்கள் திரும்பத் திரும்ப ஏற்பட்டன. மரணம், யக்க்ஷன் கேட்ட கேள்வி, பயம், விடுதலை போன்ற கனதகள் நேரிடையாகக் கண்ட விஷயங்களால், மன அதிர்வுகளால் விளைந்தவை. மனித மனத்தில் ஏற்படும் வக்கிரங்கள்- அவற்றுக்குக் காரணமான பயங்கள், சிறுமைகள், ஏமாற்றங்கள், ஊடகங்களின் ஆக்ரமிப்பால் மரத்துப்போன உணர்வுகள்... எல்லாமே அதிர்வைத்தருபவை. அவற்றுக்கெல்லாம் காரணங்களை ஆராய்வதே படைப்பிலக்கியவாதிக்கு சுவாரஸ்யம். மனித நேயமே எழுத்தின் உந்துதல் என்பதால் அந்த சுவாரஸ்யம் ஆன்மிகத் தேடலாகப் பரிணமிக்கும்போது இலக்கியம் பிறக்கிறது. நீதி சொல்வது எழுத்தாளனின் பணி அல்ல. ஏனெனில் விடையைத் தேடும் பயணத்தில் இருப்பவர்கள் எழுத்தாளர்கள் பயணத்தின் இறுதியில் விடை கிடைக்கும் என்பது நிச்சயமில்லை. ஆனால் எனக்கு அந்தப் பயணம்தான் முக்கியமே தவிர விடை அல்ல. எல்லா பயணங்களும் வெளிச்சத்தை நோக்கித்தான் செல்கின்றன. இருட்டை நோக்கி அல்ல. மனித மனங்களின் செயல்பாடுகளை அலச முற்பட்ட அந்தக் கதைகளின் முடிவில் எனக்கு விடை கிடைத்ததோ இல்லையோ சற்று வெளிச்சம் கிடைத்தது. அதைப் படிக்கும் வாசகர்களுக்கும் அத்தகைய தரிசனம் ஏற்பட்டால் கதைக்குக் கிடைத்த வெற்றியாக நான் மகிழ்வேன்.

வாக்குமூலம், பேரணி, பெயர் எதுவானாலும், ஈரம், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை போன்ற அரசியல் பின்னணி கொண்ட கதைகளை எழுதும்போது கோபமும் துயரமும் ஆட்கொள்ளும். எழுதி முடித்தவுடன் மனசை நிராசை கவ்வும். எனது எழுத்தினால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்ற இயலாமை சோர்வைத்தரும். ஆனால் எனது ஆதங்கத்தை யாரோ முகமறியாத வாசகருடன் பகிர்ந்து கொள்வேன் என்பதே எனக்குக் கிடைக்கும் மன நிறைவு. மர மாரி, 23 கட்டளைகள், படிமங்கள் ஆகிய கதைகள் சுற்றுச்சூழல், பறவை, மிருக இனம், தாவரங்கள் ஆகியவற்றுக்கு மனிதனால் ஏற்படும் பாதிப்புகளினால் ஏற்பட்ட கவலையின் வெளிப்பாடுகள், கற்பனைக்கதைகள், துணை, மழை, சேதி வந்தது. வராத பதில், வழிப்பறி ஆகியவை பெண் சார்ந்த பார்வையில் எழுதப்பட்டவை.

ஒரு முறை திருமதி எம்.எஸ் சுப்புலக்ஷ்மியை பேட்டி காணச் சென்றபோது இன்றைய இளைய தலைமுறை பாடகிகளைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்டேன். மிக நன்றாகப் பாடுகிறார்கள் என்று மனப்பூர்வமாகப் பாராட்டினார். அத்தோடு அவர்கள் மிக தைர்யமாகத் தன்னம்பிக்கையோடு பாடுவது தனக்கு மிக வியப்பை அளிப்பதாகச் சொன்னார். 'ஒவ்வொரு கச்சேரிக்கும் மேடையேறும்போது எனக்கு இப்பவும் நடுக்கம் ஏற்படுகிறது. கச்சேரி நன்றாய் அமையணுமேன்னு பயம் வருகிறது' என்றார்.

அந்த மேதைக்கும் எனக்கும் சற்றும் பொருத்தமில்லை தான். ஆனால் அவர் அதைச் சொன்னபோது அவருடைய உணர்வுகளை நான் வேறு ஒரு தளத்திலிருந்து அனுபவிக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இன்றைய இளம் எழுத்தாளர்களைக் காணும்போது எனக்கும் அவர்களது ஆற்றலைக் கண்டு அத்தகைய பிரமிப்பு ஏற்படுகிறது. அவர்களுடைய தன்னம்பிக்கையையும் தைர்யத்தையும் கண்டு ஆச்சரியம் ஏற்படுகிறது. பல வருஷங்களாக எழுதி வந்தாலும் ஒரு சிறு கதையோ நாவலோ துவங்கும்போது, எழுதும்போது ஒரு மாணவியைப் போல எனக்கு உணர்வு ஏற்படுகிறது. அது நன்றாக உருவாக வேண்டுமே என்று நான் படும் கவலையும் மேற்கொள்ளும் உழைப்பும் நான் மட்டுமே உணர்வது. ஆனால் எழுதவேண்டும் என்னும் உந்துதல் வலுவானது புதிர்த்தன்மை கொண்ட வாழ்க்கையின் வசீகரம் மகத்தானது என்பதால், நம்பிக்கையே எல்லா எழுத்துக்கும் ஆதாரம். அதன் பலத்தினாலேயே நான் தொடர்ந்து எழுதி வருவதாக நினைக்கிறேன்.

அன்புடன், வாஸந்தி

About Vaasanthi :

மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.

சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.

Rent Now
Write A Review

Same Author Books