நல்ல விஷயங்களை அப்படியே சொன்னால் அதை ஏற்பதற்குப் பொதுவாக மனம் விரும்புவதில்லை. காரணம் அவ்வாறு சொல்பவர் தம் அதிகாரத்தை நிலைநாட்டுகிறாரோ, அதற்கு நாம் பணிய வேண்டுமோ என்று கேட்பவர் நினைத்துவிடுவதுதான். அதோடு தான் அறிவுரை சொல்லப்படும் அளவுக்கு நடந்துகொண்டுவிட்ட குற்ற உணர்வும் அந்த அறிவுரைகளை ஏற்க மறுக்கும். தானே அதுகுறித்து மனசுக்குள் வருந்திக் கொண்டிருக்கும்போது, அதை மேலும் கிளறும் வகையாகத்தான் அந்த அறிவுரையை நினைக்கத் தோன்றும்.
உடலுக்கு நல்லது செய்யும் அல்லது உடல் நோயை விலக்க உதவும் மருந்தை அதன் கசப்பு சுவை தெரியாதபடி கேப்ஸ்யூலுக்கு அடைத்துத் தருவது போலதான் நல்ல விஷயங்களைச் சொல்ல வேண்டியதும்.
பள்ளிக்கூடத்தில் குறிப்பிட்ட ஆசிரியரை மாணவர்களுக்குப் பிடிப்பதும் அவருடைய வகுப்பு என்றால் தவறாமல் ஆஜராவதும் அவர் இயல்பாகப் பாடம் நடத்தும் முறையால்தான். கணிதப் பாடத்தைக்கூட வெறும் சூத்திரங்களையும், வட்ட, சதுர, முக்கோண படங்களையும் வைத்துச் சொல்லாமல், கதைப்போக்கில் நடத்தக்கூடிய ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மனதில் ஒரு கருத்து நிலைக்க வேண்டுமானால் அதன் தொடர்பான ஏதாவது மனித உணர்வுடன் கூடிய சம்பவத்தோடு தொடர்புபடுத்திதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஏதேனும் ஒரு முகவரியை ஒருவர் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவர் குறிப்பிடும் கடை அல்லது வீடு அல்லது அலுவலகத்திற்கு அருகே உள்ள கோயிலையோ, சினிமா தியேட்டரையோ, பிரபலமான கடையையோ குறிப்பிட்டு அந்த முகவரியை நாம் சொல்கிறோமே அதுபோலதான். நேரடியாக அந்த முகவரியை மட்டும் சொல்லிவிட்டு அமைந்துவிடுவோமானால், அதைத் தேடிச் செல்பவர் கூடுதல் அடையாளத் தகவல் எதுவும் இல்லாததால் தேடித் தேடிக் களைத்துவிடவும் கூடும்.
உதாரணங்களுடன் சொல்லப்படும் பாடப் பகுதிகள் போல, அடையாளங்களுடன் சொல்லப்படும் முகவரி போல, கதைகளுடன் சொல்லப்படும் நன்னெறி ஒழுக்கங்கள் விரைவில் அனைவராலும் புரிந்துகொள்ளப்படும் என்றே இன்றளவும் நம்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இந்தப் புத்தகத்தில் 150 குட்டிக்கதைகள் தம்முடன் நல்லொழுக்க அறிவுரைகளைத் தாங்கி வருகின்றன. அதே கதைகள் அல்லது அனுபவங்கள் நம் வாழ்விலும் நடைபெற வேண்டும், அப்போதுதான் அந்த அறிவுரையைத் தம்மால் மேற்கொள்ள இயலும் என்று, இந்த புத்தகத்தைப் படிப்பவர்கள் காத்திருக்க வேண்டாம். இது ஒரு ‘கோடி காட்டுதல்’தான்; இதே போன்ற ஆனால் வேறுவகையான சந்தர்ப்பங்கள் வரும்போது அதற்கேற்றார்போல நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான்.
அநேகமாக எல்லா தமிழ்ப் பத்திரிகைகளிலும் பங்களிப்பை நல்கியவர். தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி, தி மிர்ரர், ஈவ்ஸ் வீக்லி, தி வீக், ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய ஆங்கில இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய ஒரு பக்கக் கதைகள் உருது மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுடன் பேசி, பழகி, கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட சம்பவங்கள், வாசகக் கோணத்தில் எழுதுவதைக் கற்பித்த பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுடன் கொண்ட நட்பு, கதை-நாவல்-கட்டுரை-நாடகம்-பேட்டி-புகைப்படம்-வானொலி-தொலைக்காட்சி என்று எழுத்து இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.
டன்லப் டயர் உற்பத்தித் தொழிற்சாலையில் ஊழியர் நல அதிகாரியாகப் பணியாற்றியபோது டன்லப் அம்பத்தூர் நியூஸ் என்ற உள்சுற்று பத்திரிகையை (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) நடத்தியவர். ஹட்ஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் அருண் ஐஸ்க்ரீம் பிரிவுக்காக ‘அருண் குளுமை மலர்’ என்ற உள்சுற்றுப் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். ‘மாநகரச் செய்திகள்’ என்ற வட சென்னைப் பகுதிக்கான மாதமிருமுறை பத்திரிகையைத் திறம்பட நடத்தியவர்.
சுஜாதா ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ‘மின்னம்பலம்’ இணைய இதழ், மற்றும் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியராகவும், தினகரன் குழுமத்தின் ஆன்மிக இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த வகையில் சுஜாதா முதல் மிகப் பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளைத் தான் பணியாற்றிய பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களுக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும் பெருமை சேர்த்தவர்.
Rent Now