எனக்குத் தெரிந்த புகழ்பெற்ற நடிகை ஒருவருக்குத் தன் மகளையும் அப்படி ஒரு நடிகையாக்கி விட மிகவும் ஆசை. ஆனால் அந்தப் பெண்ணுக்கோ அதில் ஈடுபாடே இல்லை. தாய்க்குக் கிடைக்காத நிம்மதியான குடும்ப வாழ்க்கையும், கணவனின் ஒருமித்த காதலும் தனக்காவது கிடைக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினாள். மேலே படித்து டாக்டர் ஆகவேண்டும் என்றும் ஒரு ஆசை உண்டு. ஆனால் அவளுடைய விருப்பம் ஈடேறவில்லை, புகழ் பெற்ற நடிகையாக மட்டுமே அவள் உயர முடிந்தது. ஆனால் அவளுடைய மனத்தில் தான் விரும்பியதை அடைய முடியவில்லையே என்ற ஏக்கம் தணிந்த பாடில்லை, எனக்குத் தெரிந்த இந்த பின்னணியே 'வான்சுடர்' நாவலுக்கு அடிப்படை.
நாவல் எழுதியபோது எனக்கு இளைய தலைமுறையினரிடமிருந்து நிறைய கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. முதலில் சுரேனும், பிறகு ராதாவும் மறைந்து போனபோது, தங்களுக்கு மனத்தளவில் நெருங்கிய இருவரை பிரிந்து விட்ட மனவருத்தத்தில், என்னிடம் சண்டைபோட்ட வாலிபர்கள், பெண்கள் பலர் உண்டு, ஆனால் இந்த நாவல் அவர்களுடைய மனத்தைத் தொடும் வீதமாக அமைந்ததற்குக் காரணமே, இப்படி எழுந்த ஒரு அளவுகடந்த அனுதாபம் தான் என்பது என் கருத்து. இந்த நாவலின் இன்னொரு முக்கிய அம்சம், பள்ளிகூடப் படிப்பு மட்டுமே படித்து நின்றுவிட்ட இன்னும் பச்சை முற்றாத ஒரு இளம்பெண், கதாநாயகியாக அமைந்ததுதான். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் மன இயல்புகளையும், குழந்தை ஆசைகளையும், சிறு விருப்பு வெறுப்புகளையும் நான் அங்கங்கே வருணித்தபோது வாசகர்கள் ராதாவின் இயற்கையான அமைப்பைப் பெரிதும் பாராட்டினார்கள். இந்த வெற்றிக்குக் காரணம், என்னிடம் நெருங்கிப் பழகிய ஒரு நபரின், பள்ளிக்கூடப் பருவத்திலிருந்த, மகளை நான் அண்மையில் இருந்து கூர்ந்து கவனிக்க நேர்ந்ததுதான். அவளுடைய பண்புகளையும், இயல்பையும், அவள் என்னுடன் பழகிய நேரங்களில் கவனித்து எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதில் என்னிடம் அவளுக்குச் சிறிது கோபம் கூட உண்டு.
எப்படி இந்த அனுபவங்ளையெல்லாம் சேர்த்து நாவலாக எழுதினேன் என்று கேட்டால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே அரும்பிக் கொண்டிருந்தன.
லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.
படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.
Rent Now