தெய்வத்தை கோயிலுக்குத் தேடிச் சென்று வணங்குவது வழிபாடு; அந்த தெய்வத்தையே நம் வீட்டுக்குள் வரவழைப்பது விரதம். பரிகாரத் தலங்களை தேடித் தேடிச் சென்று நம் குறைகளை தெய்வத்திடம் சொல்கிறோம்; வீட்டில் முறையாகச் செய்யும் ஒரு விரதத்தால், அந்த தெய்வமே நம்மை நெருங்கிவந்து குறைகளைத் தீர்த்து வைக்கிறது.
பஞ்சாங்கம் பார்த்து எதையும் செய்வது பலரது வழக்கம். அந்தப் பஞ்சாங்கத்தை ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் இப்படி வர்ணிக்கிறது.
திதேஸ்து ஸ்ரீகரம் ப்ரோக்தம் வாராத் ஆயுர்விவர்தநம்
நக்ஷத்ராத் ஹரதே பாபம் யோகாத் ரோகவிமோசநம்
கரணாத் கார்யசித்தம் ச பஞ்சங்கேத நிகத்யதே
அதாவது, நல்ல திதியில் நாம் மேற்கொள்ளும் செயல் செல்வத்தை அள்ளித் தரும்; நல்ல வாரத்தில் செய்யும் முயற்சியால் ஆயுள் பலமாகும்; நல்ல நட்சத்திரத்தில் நடத்தும் பணி பாவ விமோசனத்தை அருளும்; நல்ல யோகத்தில் செய்யும் செயல் நோய் தீர்க்கும்; நல்ல கரணத்தில் எதைச் செய்தாலும், அது சிறப்பாக முடியும். இதுதான் பஞ்சாங்கம் காட்டும் வழி.
நல்ல காலத்தில் நாம் மேற்கொள்ளும் செயலே இவ்வளவு பலன்களைத் தருகிறது என்றால், அதே நல்ல காலத்தில் நாம் அனுஷ்டிக்கும் விரதங்கள், அளவிட முடியாத வளங்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. நம் முன்னோர்கள், மகான்கள், ஞானிகள் வகுத்துத் தந்த விரத முறைகளை எளிமையான வகையில் இந்த புத்தகத்தில் நீங்கள் காணலாம். ஒவ்வொரு விரதத்தையும் எப்போது, எப்படிச் செய்ய வேண்டும், அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என எல்லா விஷயங்களையும் முழுமையாகத் தரும் புத்தகம் இது. விரதங்கள் தரும் வளத்தை நீங்கள் அனுபவபூர்வமாகவே உணர முடியும்.
-ஆசிரியர்
அநேகமாக எல்லா தமிழ்ப் பத்திரிகைகளிலும் பங்களிப்பை நல்கியவர். தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி, தி மிர்ரர், ஈவ்ஸ் வீக்லி, தி வீக், ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய ஆங்கில இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய ஒரு பக்கக் கதைகள் உருது மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுடன் பேசி, பழகி, கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட சம்பவங்கள், வாசகக் கோணத்தில் எழுதுவதைக் கற்பித்த பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுடன் கொண்ட நட்பு, கதை-நாவல்-கட்டுரை-நாடகம்-பேட்டி-புகைப்படம்-வானொலி-தொலைக்காட்சி என்று எழுத்து இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.
டன்லப் டயர் உற்பத்தித் தொழிற்சாலையில் ஊழியர் நல அதிகாரியாகப் பணியாற்றியபோது டன்லப் அம்பத்தூர் நியூஸ் என்ற உள்சுற்று பத்திரிகையை (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) நடத்தியவர். ஹட்ஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் அருண் ஐஸ்க்ரீம் பிரிவுக்காக ‘அருண் குளுமை மலர்’ என்ற உள்சுற்றுப் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். ‘மாநகரச் செய்திகள்’ என்ற வட சென்னைப் பகுதிக்கான மாதமிருமுறை பத்திரிகையைத் திறம்பட நடத்தியவர்.
சுஜாதா ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ‘மின்னம்பலம்’ இணைய இதழ், மற்றும் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியராகவும், தினகரன் குழுமத்தின் ஆன்மிக இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த வகையில் சுஜாதா முதல் மிகப் பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளைத் தான் பணியாற்றிய பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களுக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும் பெருமை சேர்த்தவர்.
Rent Now