‘வருகிறாள் உன்னைத் தேடி' இது எழுபதுகளில் நான் எழுதிய முதல் மேடை நாடகம். இருபதுக்கும் மேற்பட்ட மேடைகளில் நடிக்கப் பெற்ற முழுநீள நகைச்சுவை நாடகம். வானொலியில் வர்த்தக ஒலிபரப்பின் வண்ணச் சுடரில் தொடராக ஒலிபரப்பப்பட்டது. திரைப்பட நடிகர் மாஸ்டர் சேகர், இப்போது டப்பிங் குரல் வளத்தில் புகழ் மிகுந்து விளங்கும் நடிகை அனுராதா (கலைமாமணி கே.ஆர். இந்திராதேவியின் தங்கை) மற்றும் புகழ்வாய்ந்த நாடகக் கலைஞர்களுடன், என்னுடன் பணியாற்றிய வங்கி நண்பர்கள் நடிப்பார்கள். திரைப்பட இயக்குநர் திரு. மோகன் காந்திராமன் அவர்கள் நெறிப்படுத்த நடிகர் திரு. கல்யாண்ஜி, கலைமாமணி பி.ஏ. கிருஷ்ணன், 'நாடகப்பணி' அருணகிரி, திரு. சின்னராஜ் ஆகியோர் ஆலோசனைகள் வழங்க அந்நாளில் 'சக்கை போடு’ போட்ட நாடகம் இது.
எழுபதுகளில் என்பதால் விலைவாசிகள் மற்றும் சூழல்கள் அப்போதைக்குப் பொருந்துவதாக இருக்கும். நானும் இன்றைய சூழ்நிலைக்கேற்ப வசனங்களை மாற்றவில்லை. காரணம் இதுவும் ஒரு சுகமான கற்பனையாக இப்போது இனிக்கும் என்பதற்காகத்தான். கதை ஒன்றும் பிரமாதமான கதை இல்லை. திருமண ஆசையில் ஓர் இளைஞன். பெயர் கல்யாணராமன். புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிற அவன் அலுவலகத் தேர்வுகளில் தேறி உத்யோக உயர்வு பெறட்டுமே என்றெண்ணும் பெற்றோர்கள் அவனுடைய திருமணத்தைத் தள்ளிப் போடுகிறார்கள். தள்ளிப் போடுவதற்கான காரணம் அவனுடைய ஜாதகத்தில் 30 வயதுவரை இருக்கிற கோளாறு தான் என்று பொய்யாகக் கூறித் தப்பிக்கிறார்கள்.
ஆனால் அலுவலகத்திலும், வெளியிலும் அவனைச் சுற்றியிருக்கும் சிலருக்கு ஒவ்வொரு வகையான திருமணப் பிரச்சினைகள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிரம்மச்சரிய வாழ்க்கையை அனுபவிக்க அவர்கள் அறிவுறுத்தினாலும் பெற்றோர் மனத்தில் தன்னுடைய திருமண அவசரத்தை உணர்த்த பல்வேறு உபாயங்களைக் கண்டுபிடிக்கிறான் கல்யாணராமன். ஒவ்வொரு முயற்சியும் பிள்ளையார் பிடிக்கக் குரங்காய்ப்போய் முடிகிறது.
சென்னையில் ஹோட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை என்று புலம்பினால், சமைத்துப்போடப் பாட்டியை அனுப்பி விடுகின்றனர் பெற்றோர். அடுத்து பிள்ளையின் நடவடிக்கை சரியில்லை ஒரு பெண்ணோடு சுற்றுகிறான் என்று மொட்டைக் கடிதம் போடுகிறான். விளைவு... காதலில் தோல்வியுற்று சித்த சுவாதீனமற்ற ஒரு பெண்ணின் காதலன் இவனென்பதாகச் சந்தர்ப்பச் சூழல்கள் கட்டிப் போட்டுவிடுகின்றன. இப்படிப் போகிற கதை சுபமாக முடியும்.
- ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்
நாடறிந்த எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், நாவலாசிரியர், சமூக ஆர்வலர், பேச்சாளர், பத்திரிகையாளர்.
96 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பெற்றவர்.
கலைமாமணி, இலக்கியப் பேரொளி, கவிச்சிற்பி, ஞாலக் கவிஞர், எழுத்துச் செம்மல், நாடகப் பேரொளி, சேவாரத்னா போன்ற விருதுகள் பெற்றவர். தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ( FETNA ) வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். கனடா உதயன் இதழின் உலகளாவிய இலக்கியச் சாதனையாளர் விருது பெற்றவர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, கனடா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற உலக நாடுகளுக்கு இலக்கியப் பயணம் சென்று வந்தவர்.
ஆசிரியர், வெளியீட்டாளர் - கவிதை உறவு இலக்கிய மாத இதழ், நிர்வாக அறங்காவலர் - கவிதை உறவு சாரிட்டபுள் டிரஸ்ட்.
புகழ் வாய்ந்த ஊடக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர். ஊடகவியல், வாழ்வியல், பத்திரிகையியல் பயிற்சியாளர்.
பாரத ஸ்டேட் வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
உலகெங்கும் விரிந்த நட்பு வட்டத்தைப் பெற்றிருக்கிற வெற்றியாளர்.
Rent Now