P.M. Kannan
முன்பின் அறியாத ஓர் ஆணும் பெண்ணும் தம்பதிகளாகிச் சர்வ சகஜமாக எத்தனையோ காலம் பழகியவர்கள் போல் குடும்ப வாழ்க்கை நடத்தும் அதிசயத்தைப் பற்றிச் சிந்தனை செய்து பார்த்தபோது பிறந்த கற்பனை தான் வாழ்வின் ஒளிக்கு அஸ்திவாரக் கல் நாட்டியது. ஆணைப் பெண்ணோடும் பெண்ணை ஆணுடனும் பிணைத்து வைக்கக்கூடிய அற்புத சக்தியாக விளங்கும் சரீர சுகம், காந்தம் போல் வசீகரிக்கும் காம இன்பம், சித்திக்கப் பெறாதவிடத்து, தாம்பத்திய வாழ்க்கை என்ன ஆகும் என்கிற விபரீதமான எண்ணந்தான் இந்தக் கதையைப் பின்னத் தூண்டிவிட்டது. இயற்கையாகப் பிரவகிக்கும் உணர்ச்சி வெள்ளத்திலே அமிழ்ந்துபோய், அடித்துக் கொண்டு போய்விடாமல், அந்த வெள்ளத்தை எதிர்த்து எத்தனை தூரம் எதிர்ப்புறமாக வாழ்க்கைத் தோணியைச் செலுத்திக்கொண்டு போக முடியும் என்கிற மனோபாவத்துடன் இதில் இரண்டு பாத்திரங்கள் ஆட்டி வைக்கப்படுகின்றன. அதில் ஒன்று ஆண்; மற்றொன்று பெண். பெண்ணுக்கு மாத்திரம் இந்த மனோபாவத்தைச் சிருஷ்டிப்பதற்காக நமது சமூகத்திலுள்ள புராதனமான புனிதமான நம்பிக்கையொன்றைப் பிரயோகம் செய்திருக்கிறேன். அந்த நம்பிக்கை நிலைத்து நிற்கத் தக்கவாறு சந்தர்ப்பங்களும் சூழ்நிலையும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்போதுதானே எதிர்ப்புறமாகச் செல்லும் வாழ்க்கைத் தோணி இயற்கை உணர்ச்சி என்கிற வெள்ளத்தில் தத்தளிக்கும்? இந்த இரண்டு பாத்திரங்களைச் சுற்றிச் சில உப பாத்திரங்கள் இயற்கையின் நியதியை ஒட்டி வாழ்ந்து 'வளைய' வருகின்றன.
- பி. எம். கண்ணன்