Home / eBooks / Veli Thaandiya Velladugal
Veli Thaandiya Velladugal eBook Online

Veli Thaandiya Velladugal (வேலி தாண்டிய வெள்ளாடுகள்)

About Veli Thaandiya Velladugal :

எல்லாக் கதைகளுமே சற்று அதிர்ச்சி தருபவைதான். புத்தகத்தின் தலைப்பே கதைகளின் கருப்பொருளை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.

வாழ்வதில் இருவகை. 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்பது ஒருவகை. 'எப்படியும் வாழலாம்' என்பது இன்னொரு வகை.

சமுதாயத்தில் இருக்கும் எதிர்மறைக் கருத்துக்களை சாடி, சீறி, வரம்பு மீறி வாழ்க்கை நடத்துபவர்களைப் பார்த்து இவர்கள் செய்வது நியாயம்தானோ என்ற ஐயம்கூட எழலாம்.

ஆனால் சம்பிரதாயமாகத் திருமணம் செய்து, கழுத்தில் மங்கல நாண் அணிந்த பிறகு செய்யும் தவறுகள் மன்னிக்கப்படக்கூடாது. அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்ற திட்டவட்டமான உண்மையை இந்நூலில் உள்ள சிறுகதைகள் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

எட்டுக் கதைகளைப் பற்றி விரிவாகச் சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும்!

‘எப்ப வருவா கனகா?’ கதையில் ஓய்வு பெற்ற அதிகாரியின் மகளின் தோழி, சேர்ந்து படிக்க வருகிறாள், அவள் வீட்டில் சூழ்நிலை சரியில்லை, மகளின் தோழியின்மீது ‘பார்வை பதிக்கும்’ அப்பா, அவள் படிக்க வராத நாட்களில் அவள் வீடு தேடி அழைத்து வருவதும், அதனைக் கண்டு சொந்த மகள் ஹாஸ்டலில் போய்ப் படிப்பதும்…! வயது வித்யாசம் இல்லாமல் கடைசியில்.. நீங்களே படியுங்கள்.

‘பெல்ட்’ கதையில், கதாநாயகி காசாம்புவின் ஹிஸ்டீரியாவினால் அவள் நடந்துகொள்ளும் கோரக் காட்சிகளும், காசாம்புவின் கணவனைத் தேடிவரும் ஒரு போலீஸ்காரர் மூலம் அவள் அடங்குவதும், கை மீறிப்போன மனைவியின் செய்கையினால் நொந்துபோன கணவனைப் பற்றிக் கவலைப்படாமல் காசாம்பு செய்தவை, வாசகர்களுக்கே ஆத்திரமூட்டும் அளவுக்கு இருக்கின்றன.

‘ருக்குமாமா’ கதையின் இறுதிவரை அந்த வீட்டுத் தலைவர் பேசும் வசனம் பளீரென்று அறைவத போல் உள்ளது. “தப்பு பண்ணினால் தண்டனை கிடைக்கும் என்று நான் உணர்த்தவில்லை என்றால் நான் ஜட்ஜே இல்லை...”

‘சுபலேகா’ கதையில் கள்ளக்காதலன் துணையோடு, கணவனுக்கு- கோமாவில் இருப்பவருக்கு- தொல்லை தர மந்திரவாதி மூலம் தீர்வு காண்கிறாள். என்ன பெண் இவள் என்று சொல்ல வைக்கிறார் ஆசிரியர்.

‘மாமி விட்ட தூது’ கதையின் முடிவில் மரணம் தராமல் வேற வகை தண்டனை!

ஆக நேர்மறையாகச் சொல்லாமல் எதிர்மறையாகவே கதைகளை எழுதத் தீர்மானித்திருக்கிறார் ஆசிரியர்.

‘நல்லவன் வாழ்வான்’ என்று சொன்னால் என்ன… ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்றால் என்ன… (என நினைத்தார்போலும்).

- பாமா கோபாலன்

About Ja. Ra. Sundaresan :

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.

37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வு​பெற்றார்.

ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் ​பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி ​நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.

இவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் ​பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.

சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் ​பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை​ பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் ​கொண்டவர். இரு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக் ​கொள்வது ​போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீ​தையில் கூறப்பட்ட கருத்துக்க​ளை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.

Rent Now
Write A Review

Same Author Books