ஆறு கட்டுரைகளும், ஆறு சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பு, வேணுவனவாசம். இணையத்தில் இப்போது புத்தகமாக வெளிவருகிற வேணுவனவாசத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளும், சிறுகதைகளும் வெவ்வேறுகால இடைவெளியில் எழுதியவை. ஒரு கட்டுரைத் தொகுப்பாகவோ, சிறுகதைத் தொகுப்பாகவோ தனித்தனியாக இல்லாமல் இப்படி ‘ரெண்டும்கெட்டானாக’ இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்குக் காரணம் இல்லாமலில்லை. பொதுவாகவே நான் எழுதுகிற கட்டுரைகளில் ஒரு புனைவுத்தன்மை இருப்பதாகப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சிலர் நான் எழுதுகிற கட்டுரைகளுக்கும், சிறுகதைகளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தொகுப்பில் கட்டுரை என்கிற பேரில் சில கதைகளும், சிறுகதை வேஷத்தில் சில கட்டுரைகளும் ஒளிந்திருக்கின்றன. அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை வாசகர்களிடம் ஒப்படைத்து விட்டு நான் விலகி நின்று வேடிக்கை பார்க்க உத்தேசம். இந்த விளையாட்டு நிச்சயம் நல்லதொரு வாசக அனுபவத்தைத் தரும் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஏனென்றால் எனது எழுத்துகளை முதலில் படிப்பவன், நான்தான். அவை என்னை ஏமாற்றியதில்லை.
‘வேணுவனவாசம்’ புத்தகத்தை இணையத்தில் வெளியிடும் ‘புஸ்தகா’ நிறுவனத்துக்கு என் நன்றிகள்.
சுகா
25 ஜூன் 2020
சென்னை-93
சுகா பிறந்தது திருநெல்வேலியில். மனைவி, மகனுடன் வசிப்பது சென்னையில். எழுத்தாளர். நல்ல விமர்சகர். பாலுமகேந்திராவின் மாணவர். திரைப்பட இயக்குநர். தூங்காவனம் திரைப்படத்தின் வசனகர்த்தா. பாபநாசம் திரைப்படத்தில் இவர் பெரும்பங்கு ஆற்றியுள்ளார்.
Rent Now