Home / eBooks / Vetri Chakram
Vetri Chakram eBook Online

Vetri Chakram (வெற்றிச் சக்கரம்)

About Vetri Chakram :

என்னுடைய இயற்பெயர் கிருஷ்ணமாச்சாரி, ஒரு புனைப்பெயர் வைத்துக் கொண்டு எழுத்தாளனாக மாறினேன். அந்தப் பெயர்தான் தமிழ்த்தேனீ!

ஆம் தமிழிலுள்ள பலவகைப் பூக்களில் தமிழ்ப்பூக்களில் உள்ள மகரந்தத்தை சுவைத்து அதிலுள்ள தேனை உறிஞ்சி சேகரித்து வைத்து அந்தத் தேனை உங்களுக்கு அளித்து மகிழ மனம் கொண்டதனால், தமிழ்த்தேனீ என்று மிகவும் விரும்பி பெயர் வைத்துக் கொண்டேன்.

என் எழுத்துக்கள் என்னை வளர்க்கின்றன. ஒவ்வொரு நாளும் என் மனதில் அறிவு விசாலத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு செய்தியைப் பற்றி எழுதும்போதே அந்தச் செய்தியை தவறில்லாமல் எழுதவேண்டுமே என்னும் பொறுப்பு கூடுகிறது. அதன் விளைவாக அந்த செய்தியைப் பற்றி மேலும் படிக்க ஆர்வம் ஏற்படுகிறது. ஆகவே எழுத ஆரம்பித்தாலே படிக்க ஆரம்பிப்போம். படிக்க ஆரம்பித்தாலே நிறைய எழுத செய்திகள் கிடைக்கும். இது ஒரு அறிவுச் சக்கரம். இந்த அறிவுச் சக்கரத்தில் நாம் சுழன்றால் மேன்மேலும் நம் ஞானத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்

“ஆன்றோர் செரித்த அறுசுவையின்
வெளிப்பாடே இங்கே நமக்கு அகப்பாடு,
எங்கே அறிவு வெளிப்படினும்
அதுவே நமக்கு முதல் ஈடு”

இறைவன் அருளால் எனக்கு கற்பனை குதிரை அபரிமிதமாக துள்ளும் என் மனதில். அப்படிப்பட்ட நேரங்களில் பணியிலிருந்தாலும், அல்லது நல்ல தூக்கத்தில் இருந்தாலும் வரும் கற்பனையை நினைவு வைத்துக்கொண்டு உடனே எழுதி வைப்பது என் வழக்கம். அப்படி நான் எழுதிய கவிதைகள், கட்டுரைகள், கதைகள் ஏராளம். அந்த மொத்தக் கற்பனைப் படைப்புகளையும் அப்படியே சேமித்து வைத்தேன். அவற்றையெல்லாம் இப்போது தட்டச்சு கூடத் தெரியாத நான் சுயமாகக் கணினி கற்றுக்கொண்டு அந்தக் கணினியிலே என் படைப்புக்களை எழுத்து வடிவில் கோப்புகளாக சேமித்து வைக்கின்றேன். அது மட்டுமல்ல இன்று இணையத்தில் பல குழுக்களில் நான், தமிழ்த்தேனீ என்னும் புனைப் பெயர் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் பல பாடங்களைக் கற்றுக் கொள்கிறேன். என்னுடைய எல்லாக் கலைகளுக்கும் காரணமான, மற்றும் எங்களுக்கு கிடைத்த அனைத்து செல்வங்களுக்கும் ஆசிகளுக்கும் காரணமான “நானும் என் எழுத்தும்" எனும் ஒலி இது என் அன்னையின் ஒலியே. அவரின் ஆக்கமே அவரின் எழுத்தே, அவரின் படைப்பே அதனால் இதை அவர்களுக்கே மன நெகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன். மீண்டும் தொடர்ந்து எழுத இறைவனின் கருணை எனக்கு உண்டு என்னும் நம்பிக்கையோடு உங்களை மீண்டும் என் எழுத்தின் மூலமாக சந்திக்கின்றேன். நான் பிறந்த இந்த பாரத தேசத்தின் நலனுக்காகவும், இங்கே இருக்கும் என் மக்களின் நலனுக்காகவும் ஏதேனும் செய்யவேண்டும் என்று தீர்மானித்தேன். அதன் விளைவாக ஐம்பத்து மூன்று வயது வரை நான் அனுபவித்த இன்பங்கள், துன்பங்கள், துயரங்கள், வினோதங்கள், யாத்திரைகள், ஆன்மீக உணர்வுகள் ஆகியவற்றின் மூலமாக எனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பதிவு செய்து நான் வாழ்க்கையில் கற்ற பாடங்களை மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் படைப்புகளாக மாற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டேன்.

என்னுடைய இந்த முதல் நூலான சிறு கதை தொகுப்பிலும் என்னுடைய குறிக்கோளை நான் விதைத்திருப்பதை காண முடியும். ஆகவே என் எழுத்துக்களில் பாசம், பந்தம், குடும்ப நெளிவு சுளிவுகள், அனுசரித்துப் போகும் தன்மை, அறிவுறுத்தும் தன்மை, விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்மை இருக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் எழுத்தாணி ஏந்தியவன் நான்.

ஆகவே மனிதம் என்னுடைய அடித்தளம், உலகில் மனிதம்தான் சிறந்த மதம் என்பதை வலியுறுத்தி என்னுடைய கதைகள், கட்டுரைகள், கவிதைகள் இருக்கும் அன்றாடம் நாம் சந்திக்கும் நிகழ்வுகளிலிருந்து நாம் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக அதே நேரத்தில் தேவையான விழிப்புணர்வு பெறும் வகையில் உங்கள் மனதுக்கும் இதமான கதைகளை வெளியிடுகிறேன். சிறுகதைத் தொகுப்பு என்னும் வெளியீடு மூலமாக உங்களையெல்லாம் மீண்டும் சந்திக்கப் போகிறேன். என் கதைகளில் வரும் பல நல்ல வித்தியாசமான அனுபவங்கள் உங்களையும் என்னையும் சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வைக்கும் அளவுக்கு நம் சிந்தனைகளைத் தூண்டப் போகின்றன.

- அன்புடன், தமிழ்த்தேனீ
(ஆர்.கிருஷ்ணமாச்சாரி)

About Thamizhthenee :

இவர் இயற்பெயர் கிருஷ்ணமாச்சாரி ரங்கஸ்வாமி புனைப் பெயர் : தமிழ்த்தேனீ (Thamizhthenee) பிறந்த வருடம் 01/07/ 1947, இவர் தமிழ்த்தேனீ என்ற பெயரில் இவரது படைப்புகளை உருவாக்கி வருகிறார். இவர் ஒரு நாடக நடிகர், திரைப்பட நடிகர், தமிழ் எழுத்தாளர், நாடகாசிரியர். இணையதள எழுத்தாளர், இவருடைய படைப்புகளில் மனிதம் தான் சிறந்தது என்று வலியுறுத்தி உலகில் மனிதம் தான் சிறந்த மதம் என்பதை ஆணித்தரமாக கூறுகிறவர். மெய்ஞ்ஞானம்தான் விஞ்ஞானம் என்பதையும் வலியுறுத்துகிறவர்.

Rent Now
Write A Review