என்னைச் சுற்றி நான் வேண்டியே அமைத்துக் கொண்ட வாழ்க்கையும், தானாகவே என்னைச் சூழ்ந்துள்ள வாழ்க்கையும் எனக்கு பல்கலைக் கழகப் பட்டப்படிப்புகள். இந்த அழகிய, சுறுசுறுப்பான, மந்தமான, சுகமான, சோகமான, நெறியான, நீசத் தனமான, பல்வேறு நம்பிக்கைளாலான, பொய்யான, மெய்யான, ஆண், பெண், விலங்குகள், பறவைகள், தாவரம் மற்றும் ஜடப்பொருள்களாலான வாழ்க்கையை நான் எவ்வளவுக்கு ஆழ்ந்து உற்று கவனித்து கிரகித்து, சுவீகரித்து, என் சக மனிதனிடம் அந்த எண்ணற்ற அனுபவங்களால் விளைந்த உணர்வுகளை வெளியிட்டு பகிர்ந்து கொள்ள முயல்கிறேன் - அந்த ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு சிறுகதை. அதில் ஏதேனும் புதியதாகப் புலப்படும். எனக்கும் உங்களுக்கும் ஒருவகை மகிழ்ச்சியான உறவை அக்கதைகள் ஏற்படுத்தியிருக்கலாம். என் கதைகளில் ஏதேனும் ஒன்றின் ஊடாக நீங்கள் என் அனுபவங்களில் உங்களையும், உமது அனுபவங்களில் என்னையும் பார்க்க முடிந்திருக்கும். தவிர்க்க முடியாத மொழி, நாடு, உணவுப் பழக்கத்தையும் மீறி ஒரு பிரபஞ்ச மனிதனாக, எவ்வித கட்டுப்பாடும், பிரிவும் அற்ற நிலையில் சுற்றித் திரிய இன்னும் கூட அடங்கா ஆசையில் கிடக்கும் மனம் சில விஷயங்களை இங்குள்ள சில கதைகளில் தெரிய வைத்துள்ளது.
மனிதன் தன்னைச் சுற்றியுள்ள , சார்ந்துள்ள, எதிர்த்து இயங்கவல்ல எல்லா உயிரினங்களோடும்- மனிதன் உள்ளிட்டு - ஜடப்பொருட்களோடும் வெவ்வேறு கதியில் உறவுப் பிணைப்பைக்கொள்ள வேண்டியுள்ள தருணங்களும், அத்தருணங்களில் வெளியாகும் அநுபவங்களும் இந்தக் கதைகளில் தெரிய வருபவை
எழுத்தும் சித்திரமும் விட்டல்ராவுக்குக் கைவந்த கலைகள். இவர் நிறைய சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார்.
சித்திரக் காட்சிகளில் இவருடைய ஓவியங்கள் பாராட்டுப் பெற்றுள்ளன. எழுத்தில் இவருக்குள்ள தாகம்தான் வெற்றி பெற்றது. தூரிகையின் லாவகம் எழுத்தில் சங்கமித்து விட்டது.
1941-இல் ஓசூரில் பிறந்த இவர், 1967 முதல் எழுதி வருகிறார். இவருடைய 'போக்கிடம்' நாவலுக்கு இலக்கியச் சிந்தனை பரிசு வழங்கியது.
Rent Now