M. Geetha
இயற்பெயர் மு.கீதா. அரியலூரை தாய்மண்ணாய் கொண்டவர். தேவதா தமிழ் என்ற புனைப்பெயரில் தமிழ் கூறும் நல்லுலகில் அறியப்படுபவர். முன்மாதிரியான ஆசிரியராக மட்டுமில்லாது. சமூகப்பணிகளில்,குறிப்பாக பெண்ணியம் சார்ந்த பணிகளில் மிகுந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்டவர்.
சமூக வலைத்தளங்களில் ஆகச்சிறந்த கருத்துகளால் பலரால் பாராட்டப்பட்டவர். வேலுநாச்சியாரைப் பற்றிய இவர் நூலொன்று பரந்துபட்ட பாராட்டைப் பெற்றது. மேலும் இரண்டு கவிதை நூல்கள் "விழிதூவிய விதைகள்" மற்றும்" ஒரு கோப்பை மனிதம்"என மூன்று நூல்களின் ஆசிரியர்.
ஒரு கோப்பை மனிதம் என்னும் நூலுக்காய் வளரி என்ற அமைப்பால் சிறந்த நூலாசிரியராக தேர்ந்தெடுத்து பாராட்டப்பட்டவர். நூலாக்கப்படவேண்டிய பல பதிவுகளை தன்னுடைய வலைப்பூ மூலம் விதைத்து வருபவர். பணியின் காரணமாய் புதுக்கோட்டையில் வசிப்பவர். புதுகையின் பெண்கவிஞர்களுள் முக்கியமானவராக நிலைநிறுத்திக்கொண்டுள்ளார்.
எழுதுவதோடு மட்டுமல்லாமல் கணினி தமிழ்ச்சங்க அடிப்படை நிர்வாகிகளுள் ஒருவராகவும்,வீதி கலை இலக்கியக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுபவர். பல சுயமுன்னேற்ற உரைகளை,கவியங்கங்களில் கவிதைகளை,பட்டிமன்றங்களில் பங்கேற்று வருகிறார். காணும் யாவையும் கவிதைகளாகவும்,அவலங்களை அமிலமாகவும் இவர் எழுத்துப்பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.