வெள்ளை என்பது கள்ளங்கபடமற்ற குழந்தை மனதின் குறியீடாய் இங்கே கையாளப்பட்டிருக்கிறது. ஓ...ஹென்றியின் கதைகள் அத்தனையிலும் வருகிற நபர்கள் நேர்மறை சிந்தனையாளர்களாக இருப்பது போல, இயக்குநர் ஜாஃபர் பனாஹி இந்த படைப்பில் வருகிற அத்தனை கதாபாத்திரங்களையும், வெள்ளை உள்ளங்களோடே சிருஷ்டித்திருக்கிறார்.
இதன் நாயகியாக வரும் சிறுமி ரசியா ஈரானிய சமுதாயத்தில் பெண்கள் மீது கட்டுப்பாடு என்கிற பெயரில் கட்டற்ற தடைகளை நிர்பந்திக்கொண்டிருக்கிற சூழ்நிலை. ஆனால் ரசியா தான் விரும்பியதை எதற்காகவும், யாருக்காவும் விட்டுத் தருபவள் ஆக இல்லை. எண்ணித் துணிக கருமமாய், எண்ணியதை எட்டுகிற வரை அவளின் முயற்சி தளர்வறிவதில்லை. விடாமுயற்சியின் குறியீடு அவள். அவளது விருப்பம் சிறகு போல செதில்களை இரண்டு பக்கமுமாய் மடக்கி வைத்திருக்கும் அந்த பறக்கும் தங்க மீன், நீந்தவும் நீந்தும். தேவைப்படும் போது பறக்கவும் பறக்கும் தன்மை கொண்டது. பறக்கும் தங்க மீன் என்பது அவளின் படிமம் தான். அவளின் மனது தான். அவளின் லட்சியம் தான்.
குழந்தைகள் உலகத்தில் மகிழ்ச்சி என்பது எளிமையாய் கைவரக் கூடிய வித்தையாய் இருக்கிறது. அதனாலேயே இதில் வரும் மைய கதாபாத்திரமான சிறுமி ரசியா ஒவ்வொரு முறையும் இழந்த தன் மகிழ்ச்சியை நொடியில் மீட்டெடுத்துக் கொள்கிறாள்.
மகிழ்ச்சி என்பதை எப்படி வரையறுப்பது? அது அகவயப்பட்டதாய் இருக்கிறது. குழந்தைமையின் ஈரத்தில், பரிவில், கரிசனத்தில், பிறர் மீதான நேசத்தில் நித்ய சஞ்சாரம் செய்கிறது.
வாழ்க்கையில் அது ஒரு புதிர் விளையாட்டாய் ஆக்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் இருக்கிற ஒரு பொருள் தொலைந்து விட்டது என வைத்துக் கொள்ளலாம். அப்போது நம்மை துக்கம் ஆட்கொண்டு விடுகிறது. உண்மையில் அந்த பொருள் தொலையவில்லை. நம்முடைய அகப்பார்வையின் குறைபாட்டால், நம்மிடமே இருப்பதை நாம் அறியாமல் இருப்பதை, தொலைந்து விட்டதாய் நம்பி, அந்த இழப்பை நினைத்து துக்கத்தில் ஆழ்ந்து விடுகிறோம். பின்னர் அந்த பொருள் தொலையவில்லை... நம்மிடம் தான் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டதும், நமக்குள் நாம் இழந்திருந்த மகிழ்ச்சி மீண்டு வந்துவிட்டதாய் குதூகலிக்கிறோம். அப்படியென்றால் தொலைந்து போயிருந்த மகிழ்ச்சி இத்தனை நேரம் எங்கே போயிருந்தது? எங்கிருந்து மீண்டும் வந்தது?? அந்த பொருள் எங்கும் தொலையவில்லை என்பதே நிஜம். தொலைந்து விட்டதாய் நினைக்கிற நம்பிக்கையிலேயே அந்த துயரத்தின் வேர் தொக்கி நிற்கிறது. உண்மையில் அந்த தொலைந்ததாக நம்பப்படும் பொருள் தொலைவதேயில்லை. தொலைந்து விட்டதாகவும், கிடைத்து விட்டதாகவும் மாறிமாறி தோன்றுவதெல்லாம் நம்பிக்கையின் பிம்பங்களே.
பொருள் என்று இங்கே குறிப்பிடுவது ஒரு குறியீடு. மகிழ்வின் படிமம்.
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.
Rent Now