இது என்னுடைய ஐந்தாவது சிறுகதைத் தொகுதியாக மலர்கிறது. ஒரு கணக்குப் பார்த்தால், நான் எண்ணிக்கையில் அதிகமான சிறுகதைகளை எழுதி விடவில்லைதான். ஒரு நூறைச் சற்றே தாண்டலாம், அவ்வளவே. ஆயினும் ஆரோக்கியமான சிந்தனைகளைப் பதிவு செய்திருக்கிறேன் என்கிற நம்பிக்கையும், சந்தோஷமும் நிறையவே இருக்கிறது.
மிகப் பெரும்பாலான கதைகள் நான் பழகிய, பழகும் மனிதர்களை நினைவூட்டக் கூடும். நிஜமான வாழ்க்கையிலேயே ஏராளமாய் சுவைகள் மலிந்துள்ளபோது, கற்பனையை வலிந்து போய்த் தேடிக் கொண்டிருப்பானேன்? எனினும் அறிவியல் நோக்கில் எழுதப்பட்டுள்ள சில கதைகள் அதற்கு விலக்கானவை என்று தோன்றலாம். அது முழுமையான உண்மையில்லை, ஒரளவு என்னுள், என்னைச் சுற்றி ஏற்படுகிற உணர்வுகளை மையப்படுத்தியே அறிவியலையும் எடுத்துக் கொள்கிறேன். இந்தத் தொகுப்பில் உள்ள 'பூச்சி...', 'தொட்டில்' இரண்டும் அவ்வகையில்....
என்னைப் படிக்கிறவர்களுக்கு எப்போதும் நன்றி; எப்படி விமர்சித்தாலும் சரியே!
ஸாயிரம்!
மிக்க அன்புடன்
- சுப்ர. பாலன்
திருகோகர்ணம் சுப்ரமணிய அய்யர் பாலசுப்ரமணியன், எழுத்துப் பணியில் ஈடுபட்ட எழுபதுகளில் 'சுப்ர.பாலன்' ஆனார். கலசைக்கிழார், யெஸ்பால், ஆத்மேஸ்வரன் என்ற பெயர்களிலும் கல்கி, அமுதசுரபி., தீபம் , கோபுரதரிசனம், மங்கையர் மலர் போன்ற இதழ்களில் அவ்வப்போது எழுதிவருகிறார். சிறுகதைகள், கவிதைகள், பயணக்கட்டுரைகள், அறிவியல். மருத்துவம், ஆன்மிகம், நேர்காணல்கள் என்று பல துறைகளிலும்.. மேனகா காந்தி, சுதா மூர்த்தி, ஆடிட்டர் நாராயணசாமி போன்றோரின் நூல்களைத்தமிழாக்கம் செய்துள்ளார். மகாகவி காளிதாஸரிடம் ஈடுபாடு. மேகசந்தேச விளக்கமும், சூரியனை தரிசித்து தினமும் பதிவிடுகிற சிந்தனைகளும் அடுத்து வெளியாக உள்ளன. அமரர் கல்கியின் நூல் வடிவம் பெறாமலிருந்த பல எழுத்துக்களையும் தேடித்தொகுத்து வெளியிட்டு வருகிறார். அண்மையில் எண்பது கடந்துள்ளார்.
விண்வெளி அறிவியலில் நீண்டகால ஆர்வம். இவருடைய 'மத்தாப்பூ' சிறுவர் பாடல் தொகுப்பு தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசுபெற்றது.
Rent Now