Home / Narrators / Fathima Babu

Fathima Babu

About the Narrator

முகமது ஷாஃபி கமலா தம்பதியினரின் முதல் மகளாக டிசம்பர் 26 ஆம் தேதி காரைக்காலில் பிறந்த பாத்திமா, பள்ளி காலத்திலிருந்தே நடனம் நாடகம் ஆகியவற்றில் ஆர்வம் மிகுந்திருந்தார். 5 முதல் 9 வயது வரை நடனப் பள்ளி ஒன்றில் சேர்ந்து பரத நாட்டியம் பயின்றார். இந்தி மொழியைத் தனியாகக் கற்ற இவர் தமிழ் ஆங்கில மலையாளம் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பேச வல்லவர். அரபி மொழியை வாசிக்க அறிந்தவர். புதுச்சேரி பாரதிதாசன் பெண்கள் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றவர். 12 ஆம் வகுப்பிலிருந்து பட்டப் படிப்பு முடியும் வரை கலாக்ஷேத்ரா நிறுவனரான திருமதி ருக்மணி அவர்களின் நேரடி மாணவியான ஜெயஸ்ரீ நாராயணன் அவர்களிடம் பரதம் பயின்றார். "சலங்கை" என்கிற அவரது நடனப் பள்ளி சார்பாக நடக்கும் விழாக்களில் தனி நடன நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். கல்லூரி மாணவிகளுக்கான பல போட்டிகளிலும் நடனமாடி முதல் பரிசுகளை வென்றிருக்கிறார்.

நாலாம் வகுப்பு மாணவியாக இருக்கும் போது இமாகுலேட் பள்ளிவிழாவில் கண்ணகி நாடகத்தை இயக்கிக் கண்ணகியாக நடித்துப் பேரும் பரிசும் வாங்கியவர். அதில் தொடங்கிய நாடகப்பித்து இந்தக் கணம் வரை தொடர்கிறது. சொல்வதானால் 9 வயதிலேயே இயக்குனரானவர் பாத்திமா. பள்ளிப்படிப்புடன் தேசிய மாணவர் படையான என்.சி.சியில் ஆர்வத்தோடு பங்கேற்றார். அகில இந்திய அளவில் சிறந்த வீராங்கனையாகப் பரிசு பெற்ற பாத்திமா துப்பாக்கிச் சுடுதலில் துல்லியமாய்ச் சுடுபவர்க்கான முதல் பரிசையும் வென்றவர்.

ஆல் இண்டியா ரேடியோவில் 1980 ஆமாண்டு முதல் நாடகக் கலைஞராக விளங்கி வருகிறார். செய்தி வாசிப்பவர் நெடுங்கால விடுப்பில் சென்றபோது செய்தி வாசிக்கும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது. ஆல் இண்டியா ரேடியோவில் மாநிலச்செய்திகள் வாசிப்பவராக மாறினார். புதுச்சேரி மாநிலத்தின் செய்தி வாசிப்பவர்களில் தனித்துத் தெரிந்த இவரை அப்போது தொலைக்காட்சியில் பணியாற்றிய உதயசங்கர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பதற்கான ஆர்வத்தை விதைத்தார். முதலில் தயங்கிய பாத்திமா பிறகு செய்தி வாசிப்பாளராகவும் மாறினார். பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த இவர் அங்கே ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் எம்.எஸ்.டபிள்யூ படிப்பில் சேர்ந்து ஒரு வருடம் பயின்றார். கல்லூரி விடுதியின் விதிமுறைகள் செய்தி வாசிக்கச் சென்று திரும்புவதற்கு அனுமதிக்கவில்லை. அதே சமயம் இந்தியன் ஆயில் கார்பரேஷனில் இவருக்குப் பணி உத்தரவு கிடைத்தது.ஒரு ஆண்டிலேயே அந்தப் படிப்பை விட்டு விட்டு இந்தியன் ஆயிலில் பணிக்குச் சேர்ந்தவர் அதை ஒட்டி தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பதற்கான ஆடிஷனில் கலந்து கொண்டார். மூன்று மாதங்களில் வேலை கிடைத்தது ஜூலை 1, 1987 ஆம் ஆண்டு செய்தி வாசிப்பைத் தொடங்கியவர் 30 வருடங்கள் தூர்தர்ஷன் விஜய் டிவி எண்டிடிவி விஜய்டிவி ராஜ் டிவி ஜெயாடிவி போன்றவற்றில் செய்தி வாசித்திருக்கிறார்

தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் சின்னத்திரைத் தொடர்களில் நடித்த பெருமைக்குரியவர். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'கல்கி' திரைப்படம் மூலம் திரைப்பட நடிகையாக மாறியவர். வி.ஐ.பி,நேருக்கு நேர், உளவுத்துறை, ஸ்வர்ணமுகி, துள்ளித் திரிந்த காலம், நீ வருவாய் என, முதல்வன், உன்னருகே நானிருந்தால், முகவரி, பார்த்தேன் ரசித்தேன், மனதைத் திருடி விட்டாய், மின்னலே, ஆளவந்தான், தேவதையைக் கண்டேன், திருப்பாச்சி,குசேலன், சரோஜா, உள்ளிட்ட 80 படங்களில் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார்.

கே.பாலச்சந்தரின் நாடகத்தில் நடித்த அனுபவம் கொண்ட ஃபாத்திமா முகப்புத்தகத்தில் நடிப்பார்வம் மிகுந்திருந்த புதியவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வார இறுதி நாட்களில் நடிப்புப் பயிற்சி அளித்து அவர்களை மையப்படுத்தி ஐந்து நாடகங்களை மேடையேற்றினார். நாடகத்தின் துவக்க விழாவுக்கு வருகை புரிந்து தொடங்கி வைத்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அடுத்த நாடகம் குறித்துக் கேட்க பாத்திமா பாபு "வேறேதும் ஸ்க்ரிப்ட் கைவசம் இல்லை" என்று பதிலளித்தார். உடனே தன்னுடைய "சேது வந்திருக்கேன்" எனும் நாடகத்தை அவருக்குத் தந்த கே.பாலச்சந்தர் அதனை மேடையேற்றும்படி ஆசி வழங்கினார். அந்த நாடகம் மேடையேற்றம் காணும் போது அமரர் ஆகியிருந்தார் இயக்குனர் சிகரம் கேபி அவர்கள். சித்ராலயா கோபுவின் குமாரர் சித்ராலயா ஸ்ரீராம் அவர்கள் எழுதிய தாரமா தாலியா என்ற நாடகத்தை மேடையேற்றினார். ஞானி அவர்களது பரீட்சா நாடகக் குழுவில் குறிப்பிடத் தக்க நடிகையாக இவர் விளங்கினார்.

சிறந்த நாடக நடிகைக்கான கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் வழங்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. டி.வி.ராதாகிருஷ்ணனின் சௌம்யா குழுவினர் நடத்திய இரண்டு நாடகங்களில் பங்கேற்று இரண்டுக்காகவும் மைலாப்பூர் அகாடமியின் சிறந்த பங்கேற்புக்கான அந்த வருடத்திய நாடக விருது இவருக்குக் கிடைத்தது. மேலும் அதே அகடமியின் சிறந்த வில்லி விருதும் பெற்றார். மதுவந்தி நடத்திய நாடகப் போட்டியில் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த நாடகம் என இரண்டு விருதுகளை இவர் பெற்றார். ஈடிவி தெலுங்கு தொலைக்காட்சி நடிப்புக்கான சிறந்த நடிகை விருதினை இவருக்கு வழங்கியது.

பத்மஸ்ரீ கமல் ஹாஸன் வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீஸன் 3 இல் இவர் பங்கேற்பாளராகக் கலந்து கொண்டார். பல்வேறு நேரடி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். அவற்றுள் கேஜே.ஏசுதாஸ் எஸ்பிபாலசுப்ரமணியம் கே.எஸ்.சித்ரா உள்ளிட்ட பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளும் அடக்கம். ஸ்ரீலங்கா ஓமான் குவைத் மஸ்கட் துபாய் சிங்கப்பூர் இலங்கை ஃபிஜி தீவுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார்.

க்ளப் ஹவுஸ் சமூகதள செயலியில் இவரது சிறுகதை நேரம் நிகழ்ச்சி முக்கியத்துவமும் பிரபலமும் கொண்டு நிகழ்ந்து வருகிறது. குபரா சுந்தரராமசாமி லா.ச.ரா,ஜெயகாந்தன் கு.அழகிரிசாமி புதுமைப்பித்தன்-சிவசங்கரி-அம்பை-ஜெயமோகன்-சாரு நிவேதிதா அசோகமித்திரன் வ.வே.சு,தி.ஜானகிராமன் பிரபஞ்சன் கி.ரா திலீப்குமார் வேலராமமூர்த்தி நாஞ்சில் நாடன் பாரதிகிருஷ்ணகுமார் பாஸ்கர் சக்தி ஆத்மார்த்தி அராத்து அனோஜன் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை நிகழ்த்துக் கலையாக வாசித்து வருகிறார். எழுதப்பட்ட கதைகளைத் தன் குரலால் காற்றில் எழுதுகிற கான சஞ்சிகையாகவே க்ளப் ஹவுஸ் செயலியின் கதை நேரம் நிகழ்வை முன்னெடுத்து வருகிறார்.

கணவர் பாபு இந்தியன் ஆயில் கார்பொரேஷனில் அக்கவுண்ட்ஸ் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். இவர்களுடையது காதல் திருமணம். இரண்டு மகன்களில் மூத்தவர் ஆஷிக் திருமணமாகி மனைவி மானஸாவுடன் பங்களூருவில் வசிக்கிறார். இளையவர் ஷாருக் சென்னையில் பெற்றோருடன் வசிக்கிறார்.

தோட்டம் வளர்ப்பதில் அலாதிப்ரியம் கொண்டவர் பாத்திமா. பென்ஸில் ஓவியங்கள் பலவற்றை வரையும் ஆர்வமும் திறமையும் கொண்டவரான இவர் இளையராஜா கேபாலச்சந்தர் நாஸர் மதன்பாப் சுமன் மற்றும் மோகன்லால் போன்றவர்களை வரைந்து அவர்களிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார். இவருடைய நேர்காணல் திறனை எழுத்தாளர் சுஜாதா தன் கட்டுரை ஒன்றில் பாராட்டி எழுதினார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் கரங்களால் பெரியார் விருது மற்றும் வேலூர் பல்கலைக் கழகத்தில் ஃபெலோஷிப் விருது போன்றவற்றை வாங்கியவர். பிர்லா ப்ளானிடேரியம் தொடங்கியதிலிருந்து ஆங்கிலம் மற்றும் தமிழ் என இருமொழிகளிலும் இவர் குரலில் தான் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரசனையே தேடியடைவதற்கான ப்ரியம் என்பதைத் தன் செய்தியாய்ச் சொல்கிறார், பேச்சு எழுத்து சொல் செயல் எனக் கலையின் சகல பரிமாணங்களையும் ஒருங்கிணைக்கும் நுண் முகமாகத் திகழ்ந்து வரும் "குரல்கலாவல்லி" பாத்திமா பாபு.

Narrator's Books